தமிழ் குரல் / AI Voice
இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டது. இதுகுறித்து கடந்த மாதம் இலங்கை சென்று விசாரணை நடத்திய நவநீதம் பிள்ளை ஐ.நா.வில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதன் முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில், போர் முடிந்து 4 வருடங்கள் ஆனபிறகும் தமிழர் பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிக்குள் உள்ளன. தனியாக இருக்கும் பெண்கள், சிறுமிகள் ராணுவத்தினரின் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.வெள்ளை வேன் கடத்தலும், இராணுவ அக்கிரப்பும் இன்னும் நீங்கவில்லை தான் சென்ற கிராமங்களுக்கு முன்பும் பின்பும் காவல்துறையும், ராணுவத்தினரும் பொதுமக்களை மிரட்டியுள்ளனர். போர்க்குற்றங்கள் குறித்து நம்பகத்தனமான விசாரணை நடத்தி மார்ச் மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். இல்லையென்றால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, இலங்கை கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றும கூறியுள்ளார்.
இலங்கை இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். தமிழர்கள் படுகொலையை தடுக்க எந்த உலக நாடும் முன் வராத நிலையில் ஐ.நா. சபை இதில் காலதாமதமாக உண்மையை உணர்ந்து கொண்டுள்ளது.இந்த விஷயத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மட்டும் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம்பிள்ளை போரில் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு பகுதிக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் மூலம் வாய்வழி அறிக்கையாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் “போரின் போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், ராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை.குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை.
போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது.
விடுதலைப்புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு ஏ.சி.எப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளது என நவி பிள்ளை தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் ராணுவமும் சென்றது குறிப்பிட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும்
வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறோம் 13 ஆவது சட்ட திருத்தம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.
தனியாக வசிக்கும் பெண்கள், சிறுமிகள் ராணுவத்தால் பாலியல் அத்து மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக் கூடிய சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. பாலியல் துஷ்பிர யோகங்களை அரசு சிறிதும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தனியார் நிலங்களை ராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்தப்படுகிறது. வட மாகாணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் ராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விஷயங்களில் இருந்து ராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளோம்.கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டுகிறோம்.
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும் காணமல்போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை.
காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த ஐ.நா. நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நம்புகிறோம.” என்று அதில் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் நவநீதம் பிள்ளையின் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று ஐ.நா.வுக்கான இலங்கை அரசின் பிரதிநிதி ரவிநாத் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் அவர் பேசுகையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோர அவருக்கு அதிகாரம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.
