தமிழ் குரல் / AI Voice
மனித வாழ்வின் பயணம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம் மற்றும் முதுமைப்பருவம் என மூன்று முக்கிய காலகட்டங்களைக் கடந்து செல்கிறது. இதில் அறுபது வயதைக் கடந்தவர்கள் மூத்த குடிமக்கள் அல்லது முதுமைப் பருவத்தினராகக் கருதப்படுகிறார்கள். நம்மைத் தன் கண்மணி போலப் பாதுகாத்து, கஷ்டப்பட்டு சீராட்டி வளர்த்த நமது பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லங்களில் அடைப்பது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும். நம் குடும்பத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றைச் சுமந்து நிற்கும் நமது தலைமுறையின் ஆணிவேர்களான முதியவர்கள் எப்போதும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் நாளாக அக்டோபர் 1 ஆம் தேதி உலக முதியவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையின் அச்சாணியும் முதியவர்களின் பங்களிப்பும்
ஒரு சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் முதியவர்களின் பங்கு அளப்பரியது. பல தசாப்த கால அனுபவமும் அறிவும் கொண்ட மூத்த குடிமக்கள், தங்களது குடும்பத்திற்கும் நாட்டுக்கும் ஆற்றிய சேவைகள் விலைமதிப்பற்றவை. இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் சவால்களை எளிதில் கடந்து செல்ல இவர்களின் வழிகாட்டுதலும் அறிவுரைகளும் அவசியமானவையாக இருக்கின்றன. ஆனால், இன்றைய நவீன காலத்தில் வேகமான வாழ்க்கை முறை மற்றும் கூட்டுக் குடும்பங்களின் சிதைவு காரணமாக முதியவர்கள் தனிமைப்படுத்தப்படும் அவல நிலை அதிகரித்து வருகிறது. பெற்ற பிள்ளைகளைப் புறக்கணிக்கப்பட்டு, தங்களின் இறுதி காலத்தை முதியோர் இல்லங்களிலும் தனிமைச் சுவர்களிலும் கழிக்க வேண்டிய துயர நிலைக்கு முதியவர்கள் தள்ளப்படுவது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் விசயமாகும்.

நீண்ட ஆயுள் காலமும் நவீன சமூகத்தின் கடமைகளும்
மருத்துவத்துறையின் அசுர வளர்ச்சி மற்றும் சுகாதார வசதிகளின் முன்னேற்றம் காரணமாக மனிதர்களின் ஆயுட்காலம் முன்பு காட்டியிலும் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது மகிழ்ச்சியான விஷயமே என்றாலும், அது தொடர்பான சமூக மற்றும் பொருளாதார சவால்களும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டுக்கான உலக முதியவர்கள் தினத்தின் கருப்பொருளாக நீண்ட ஆயுள் காலம்: நீண்ட வாழ்வுக்கான அமைப்புகளை மறுபரிசீலனை செய்தல் (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிந்தனையின் அடிப்படையில், முதியவர்கள் தங்களது முதுமைப் பருவத்திலும் நிதிப் பாதுகாப்புடனும், உடல் மற்றும் மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் நவீன சமூக அமைப்புகள் தங்களை மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
குடும்பத்தின் அரவணைப்பும் நமது தார்மீகக் கடமையும்
சட்டம் எவ்வளவோ விதிகளை வகுத்தாலும், முதியவர்களுக்குத் தேவையான உண்மையான பாதுகாப்பையும் அன்பையும் அரசாங்கத்தையோ அல்லது முதியோர் இல்லங்களையோ முழுமையாக வழங்கிவிட முடியாது. நம்மைச் சுமந்த கைகளை, முதுமைத் தளர்வுற்ற காலத்தில் தாங்கிப் பிடிக்கும் தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உண்டு. அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், உணர்வுபூர்வமான அரவணைப்பு மற்றும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலமே நாம் உண்மையான முதியவர்கள் தினத்தைக் கொண்டாட முடியும். முதியோர்களைப் பேணிப் பாதுகாப்பது வெறும் கடமை மட்டுமல்ல, அது நம் பண்பாட்டின் அடையாளம். மூத்தவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதன் மூலமே ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலச் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.
பி.டி.எஸ்.சேகர்
