டிஜிட்டல் இறையாண்மை: இணையவெளியில் இந்தியாவின் புதிய தற்காப்புக் கேடயம்!

டிஜிட்டல் இறையாண்மை: இணையவெளியில் இந்தியாவின் புதிய தற்காப்புக் கேடயம்!

நவீன யுகத்தில் ஒரு நாட்டின் நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி எல்லைகளுக்கு இணையான முக்கியத்துவத்தை அந்த நாட்டின் ‘டிஜிட்டல் இறையாண்மை’ (Digital Sovereignty) பெற்றுள்ளது. இது ஒரு நாடு தனது எல்லைக்குள் உருவாகும் டிஜிட்டல் தரவுகள் (Data), தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் மற்றும் மென்பொருள் வழிமுறைகள் (Algorithms) ஆகியவற்றின் மீது கொண்டிருக்கும் முழுமையான கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. உலகமயமாக்கல் மற்றும் இணையப் புரட்சியால் நாடுகள் எல்லைகளற்றுப் பிணைக்கப்பட்டிருந்தாலும், ஒரு நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தேசப் பாதுகாப்பு தொடர்பான தரவுகள் அந்நிய நாட்டு நிறுவனங்களாலோ அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களாலோ கையாளப்படுவதைத் தடுத்து, அவற்றைச் சுயமாக நிர்வகிக்கும் உரிமையே இதன் மையக்கருவாகும்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் 5G தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், “தரவுகளே புதிய எரிபொருள்” (Data is the new oil) என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், வெளிநாட்டுத் தொழில்நுட்பச் சந்தைகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டுத் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை (Data Protection Laws) வலுப்படுத்துவதும், சொந்தமாகத் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்குவதும் ஒரு தேசத்தின் தன்னாட்சிக்கு இன்றியமையாததாகிறது. டிஜிட்டல் இறையாண்மை என்பது வெறும் தொழில்நுட்ப பாதுகாப்பு மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரம், பொருளாதார மேலாதிக்கம் மற்றும் கலாச்சார அடையாளத்தை இணையவெளியில் நிலைநிறுத்தும் ஒரு வலிமையான கேடயமாகும்.

அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்களின் தரவு மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பைத் தற்காத்துக்கொள்ளும் ‘டிஜிட்டல் இறையாண்மை’ நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன. இந்த உலகளாவிய போட்டியில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா முன்னணியில் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதலீட்டில் முதலிடம்: உலக நாடுகளை முந்தும் இந்தியா

சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்திய நிறுவனங்களில் சுமார் 62 சதவீதம் பேர் டிஜிட்டல் இறையாண்மையில் தீவிரமாக முதலீடு செய்து வருகின்றனர். இது ஜெர்மனி, ஜப்பான் (57%), அமெரிக்கா (52%) மற்றும் பிரான்ஸ் (39%) ஆகிய வல்லரசு நாடுகளைக் காட்டிலும் மிக அதிகம். தரவுப் பாதுகாப்பின் அவசியத்தை இந்திய நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் முன்னரே உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளன என்பதையே இது பறைசாற்றுகிறது.

எதிர்காலச் சவாலும் ‘இறையாண்மை AI’ தீர்வும்

தொழில்நுட்ப உலகில் இன்று செயற்கை நுண்ணறிவு (AI) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், வேகமான AI வளர்ச்சியா அல்லது தரவுப் பாதுகாப்பா என்ற கேள்வி எழும்போது, பெரும்பாலான நிறுவனங்கள் ஒருவிதமான தயக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. ஆனால், நிபுணர்களின் கருத்துப்படி இது ஒரு ‘False Tradeoff’. அதாவது, இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை; மாறாக, ‘இறையாண்மை கொண்ட AI’ (Sovereign AI) மூலம் இரண்டையும் ஒரே நேரத்தில் சாத்தியப்படுத்த முடியும்.

சுமார் 64 சதவீத தொழில்நுட்பத் தலைவர்கள், AI மாதிரிகளின் பயிற்சி மற்றும் தரவுத் தேடலில் வெளிப்படைத்தன்மை இருப்பதே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான டிஜிட்டல் வலிமைக்கு அடிப்படை என நம்புகின்றனர்.

இந்தியாவின் உள்நாட்டுப் புரட்சி: IIT மற்றும் சர்வம் AI

இந்தத் திசையில் இந்தியாவின் முன்னெடுப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. IITM பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் சர்வம் AI ஆகிய அமைப்புகள் இணைந்து, இந்தியத் தரவுகள் மற்றும் மொழிகளை அடிப்படையாகக் கொண்ட உள்நாட்டு AI கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன. இது பாதுகாப்பு, நிதி மற்றும் சுகாதாரம் போன்ற உணர்வுப்பூர்வமான துறைகளில் அந்நிய நாட்டுத் தொழில்நுட்பச் சார்நிலையைக் குறைக்க உதவும்.

குறிப்பாக, சர்வம் AI நிறுவனம் சுமார் 300 மில்லியன் டாலர் வரை நிதியைத் திரட்டி, தனது மதிப்பை 1.2 பில்லியன் டாலராக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் இறையாண்மைச் சூழலியல் எவ்வளவு பெரிய பொருளாதார வாய்ப்பாக மாறிவருகிறது என்பதற்குச் சான்று.

இணையவெளியில் நமது தரவுகள் நமக்கே சொந்தம் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலமே, எதிர்காலத்தின் டிஜிட்டல் வல்லரசாக இந்தியா உருவெடுக்க முடியும்.

ஈஸ்வர் பிரசாத்

Related Posts