ஊடக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்:லோகோ திருடர்களுக்கு இனி சிறைதான் வழி

ஊடக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்:லோகோ திருடர்களுக்கு இனி சிறைதான் வழி

னநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் பெயரையும், அதன் இலச்சினையையும் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்துகளைப் பரப்புவதைக் கண்டிக்கிறோம் என்று மட்டும் சொல்வது இன்று சிலருக்குப் பிழைப்பாகவே போய்விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூச்சலிடும் முகமே இல்லாத “சமூக வலைதளப் போராளிகள்”, இன்று எல்லையைக் கடந்து அருவருப்பான சொற்களைப் புழங்கத் தொடங்கியுள்ளனர். இதை வெறும் ‘கண்டனம்’ என்ற ஐந்து எழுத்தில் கடந்து செல்வது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு.

அருவருப்பானச் சொல்லாடல்: நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டிய அவலம்!

ஊடகவியலாளர்களையும், செய்தி நிறுவனங்களையும் அவர்கள் புழங்கும் அதே சமூகத் தளங்களில் ‘வேசி ஊடகம்’ என்று அழைப்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்தச் சொல்லைப் பயன்படுத்துபவர்கள் அதன் பொருளை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். செய்திக்காகத் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்டு, வெயில், மழை பாராமல், சொந்த உடல் நலத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களை இப்படி இழிவுபடுத்தும் எவன் ஒருவனும், அந்தச் சொல்லின் ஆழமான பொருளை ஆராய்ந்தால், நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டும். இது ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின் மீதான தீராத இழுக்கு.

அயோக்கியத்தனத்தின் உச்சம்: போலி கணக்குகளும் விஷமப் பிரச்சாரமும்!

இச்சூழலில் சமீபகாலமாக ஊடக நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டு போலிக் கணக்குகளைத் தொடங்கி, தவறான மற்றும் அருவருப்பான தகவல்களைத் திட்டமிட்டுப் பதிவிடுவது அதிகரித்துவிட்டது. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? குறிப்பாகத் தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்களையும், அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களையும் குறிவைத்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற இன்னும் முழுமையாகக் காலூன்றாத ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில தனிநபர்கள் நடத்தும் அவதூறுப் பிரச்சாரங்கள் அருவருப்பின் உச்சம். விஷமத்தனமான பதிவுகள் மூலம் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்த முயலும் இந்தச் சில்லறைத்தனமான செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

சங்கங்களின் நாடகம் இனி செல்லாது!

இப்படிப்பட்ட அருவருப்பான தாக்குதல்கள் நடக்கும்போது, ஊடகங்களின் பெயரால் இயங்கும் சில சங்கங்களும், கிளப்களும் பெயருக்கு எக்ஸ் (X) தளத்தில் ஒரு கண்டனப் பதிவைப் போட்டுவிட்டுத் தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். “சும்மனாச்சும் கண்டிக்கிறோம்” என்ற இந்த வெறும் சடங்குப் பதிவுகளால் எந்தப் பயனும் இல்லை. பத்திரிகையாளர் உரிமைக்குப் பாதுகாப்பு அரண் என்று சொல்லிக் கொள்ளும் இந்தச் சங்கங்களின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது. அத்துமீறல்களைக் கண்டு வெறும் கண்டனங்களோடு நிற்காமல், களத்தில் இறங்கிச் சட்ட நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாதவர்கள் எதற்குச் சங்கம் நடத்த வேண்டும்?

அதிரடி நடவடிக்கை: இனி இதுதான் வழி!

ஊடகங்களின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் இந்த “அல்லு சில்லுகள்” மீது இனி இரக்கம் காட்டத் தேவையில்லை.

  1. சைபர் கிரைம் வேட்டை: ஊடக லோகோவைத் தவறாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு கணக்கின் மீதும், அந்தத் தனிநபர் மீதும் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட வேண்டும்.

  2. எக்ஸ் (X) நிர்வாகத்திற்கு எச்சரிக்கை: அங்கீகரிக்கப்படாத, அவதூறு பரப்பும் கணக்குகளை முடக்கக் கோரி, எக்ஸ் நிர்வாகத்திற்கு முறையான சட்ட ரீதியான எச்சரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பப்பட வேண்டும்.

ஒரு செய்தி நிறுவனத்தின் லோகோ என்பது அதன் பல ஆண்டுகால உழைப்பு மற்றும் பல ஊடகவாசிகள் சிந்திய ரத்தத்தின் அடையாளம். அதைச் சிதைக்க நினைப்பவர்களுக்குச் சிறைக்கதவுகள் திறக்கப்பட வேண்டும். சட்டத்தின் பிடி இறுகினால் மட்டுமே, ஊடகப் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தும் முன் எவனும் நடுங்குவான். ஊடக லோகோ என்பது அரசியல் விளையாட்டிற்கான கால்பந்து அல்ல; அதைத் தொடும் ஒவ்வொருவரின் முகவரி சைபர் கிரைம் என்பதை உணர வைக்க வேண்டிய தருணமிது!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts