யசோதரா லாலின் ‘What They Don’t Tell You…’:திருமணத்தின் மன ரகசியம்!
திருமணம் என்றாலே அது ஒரு தேவதைக்கதை போன்றது என்றும், ‘இறுதிவரை இன்பமாக வாழ்ந்தார்கள்’ (Happily ever after) என்பதுதான் அதன் முடிவு என்றும் நாம் திரைகளிலும் கதைகளிலும் பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனால், நிஜ வாழ்க்கை அந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது என்கிறார் பிரபல எழுத்தாளர் யசோதரா லால். தனது ‘What They Don’t Tell You About Marriage‘ என்ற புதிய புத்தகத்தில், திருமணமான தம்பதிகள் சந்திக்கும் மிக முக்கியமான ஒரு மனநிலை மாற்றத்தைப் பற்றி அவர் சுவாரசியமாகப் பேசுகிறார்.
‘சிம்பயாசிஸ்’ டூ ‘ரியாலிட்டி’: அந்த முதல் அதிர்ச்சி!
திருமணத்தின் தொடக்கக் காலம் என்பது ‘சிம்பயாசிஸ்’ (Symbiosis) எனப்படும் ஒருவித ஒன்றிணைந்த காலம். இதில்தான் “நீயே உலகம்” என்ற தேனிலவு மனநிலை இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தருணத்தில், நம் துணை நாம் கற்பனை செய்த அந்த ‘பெர்ஃபெக்ட்’ மனிதர் இல்லை என்பதை உணரத் தொடங்குவோம்.

எல்லின் பேடர் மற்றும் பீட் பியர்சன் ஆகியோரின் ‘தம்பதிகள் சிகிச்சை மாதிரியை’ (Developmental Model of Couples Therapy) மேற்கோள் காட்டும் யசோதரா, இதை ‘முதல் ஏமாற்றம்’ (First Disillusionment) என்கிறார். இது ஒரு மோசமான விஷயம் அல்ல; மாறாக, உறவு ஒரு முதிர்ச்சியான கட்டத்திற்கு (Differentiation stage) நகரத் துடிக்கிறது என்பதற்கான அறிகுறி இது.
புதைக்கப்பட்ட காயங்களும் ‘நெகட்டிவ்’ டெம்ப்ளேட்டும்
பல தம்பதிகள் இந்த முதல் ஏமாற்றத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. “சரி போகட்டும்” என்று கார்பெட்டிற்கு அடியில் தள்ளி விடுகிறார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் முறையாகப் பேசித் தீர்க்கப்படாத அந்தச் சின்ன ஏமாற்றம், மனதிற்குள் ஒரு கசப்பான விதையாகத் தங்கிவிடுகிறது.
பல வருடங்களுக்குப் பிறகு, தம்பதிகள் மோதிக்கொள்ளும் போது, அந்தப் பழைய காயத்தின் அடிப்படையில்தான் ஒருவர் மற்றவரைப் பார்க்கிறார்கள். “அப்பவே அவர் அப்படிதான் பண்ணார்” என்கிற அந்த ‘நெகட்டிவ் டெம்ப்ளேட்’ பின்னாளில் வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் பெரிதாக்குகிறது. இதை யசோதரா ஒரு ‘டயக்னோஸ்டிக்’ கருவியாகவே பயன்படுத்துகிறார்.
இது துணையைப் பற்றியதா? அல்லது உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றியதா?
இந்த நூலின் ஆகச்சிறந்த பகுதியே இதுதான். ஒரு துணையிடம் நாம் அடையும் ஏமாற்றம் என்பது, உண்மையில் நமது குழந்தைப் பருவத்தில் நமக்குக் கிடைக்காத ஏதோ ஒன்றின் வெளிப்பாடு என்கிறார் யசோதரா.
-
“என்னை என் துணை பார்த்துக்கொள்ள வேண்டும்”
-
“நான் சொல்வதை அவர் காது கொடுத்துக் கேட்க வேண்டும்” என்ற நமது எதிர்பார்ப்புகள் உண்மையில் பல தசாப்தங்களுக்கு முன் நமது பெற்றோரிடமோ அல்லது சூழலிடமோ நாம் எதிர்பார்த்து ஏமாந்த விஷயங்களாக இருக்கலாம்.
உளவியலாளர் எரிக் பெர்ன் மற்றும் கார்ல் ஜங் ஆகியோரின் தத்துவங்களை இணைத்து யசோதரா விளக்கும்போது, “உங்கள் ஆழ்மனதில் இருக்கும் காயங்களை நீங்கள் உணர்ந்து குணப்படுத்தாதவரை, உங்கள் வாழ்க்கை அந்த பழைய கசப்பான ‘ஸ்கிரிப்ட்’ படியே மீண்டும் மீண்டும் நடக்கும். அதைத்தான் நீங்கள் ‘விதி’ என்று நினைக்கிறீர்கள்” என்கிறார்.
முடிவாக…
யசோதரா லாலின் இந்தப் புத்தகம், திருமண உறவில் இருப்பவர்கள் தங்களைத்தாமே சுயபரிசோதனை செய்துகொள்ள ஒரு கண்ணாடியாக அமைகிறது. உங்கள் துணையின் குறைகளைக் காண்பதை விட, அந்த ஏமாற்றம் உங்களுக்குள் எதைத் தூண்டுகிறது என்பதைப் புரிந்துகொண்டால், மணவாழ்க்கை ஒரு போராட்டமாக இல்லாமல், ஒரு புரிதலான பயணமாக மாறும்.
ரமாபிரபா


