ஃப்ரீயாகி விட்ட கூகுள் ஜெமினி 2.5 புரோ!
கூகுள் நிறுவனம் தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரி ஜெமினி 2.5 புரோ-வை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் ஜெமினியின் மேம்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடிந்தது.
கூகுள் நிறுவனத்தின் டீப்மைன்ட் அணியைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய ஜெமினி 2.5 புரோ, இதுவரை கூகுள் வெளியிட்டுள்ள நுண்ணறிவு மாதிரிகளில் அதிகத் திறன் வாய்ந்ததாகவும் முன்பிருந்த நுண்ணறிவு மாதிரிகளைவிட மேம்பட்ட செயல்திறனை கொண்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. அது மட்டுமன்றி இதன் மின்சார நுகர்வும் குறைவு.
ஜெமினி செயற்கை நுண்ணறிவு ஒரு முழுமையான பல்துறை (Multimodel) தொழில்நுட்பம் ஆகும். இது ஒரே நேரத்தில் உரை, படம், ஒளிவழி, ஒலிவழி, மற்றும் கணினி மொழிகளை புரிந்துகொள்ளும் திறன் பெற்றுள்ளது. ஜிபிடி-4 போலவே, இதுவும் படங்களை புரிந்துகொள்ளும் திறன் கொண்டது. ஆனால் ஜெமினி 2.5 ப்ரோ, தனித்தனியாக துணை மாதிரிகளை பயன்படுத்தாமல், இயல்பாகவே எல்லா தரவுகளையும் ஒரே வடிவமைப்பில் கையாளும் திறனைக் கொண்டுள்ளது.

பல்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித உணர்வுகள், புரிதல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த புதிய நுண்ணறிவு மூலம், மனிதக் கண்காணிப்பு இல்லாமல் பிழை திருத்தம், அனைத்து ஊடகத் தரவுகளையும் ஒரே இடத்தில் செயலாக்கம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் போன்ற செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
ஜெமினி 2.5 மாதிரிகள் மனிதனைப்போல் சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட மாதிரிகள். இவை பதிலளிக்கும் முன் தங்களின் எண்ணங்களை ஆராயும் திறனைக் கொண்டவை, இதனால் மேம்பட்ட செயல்திறனையும் உயர்ந்த துல்லியத்தையும் பெற முடிகிறது. இத்துறையில் ஆராயும் திறன் என்பது வெறும் வகைப்படுத்தலும் கணிப்பும் மட்டுமல்ல. அது தகவலை பகுப்பாய்வு செய்வது, தர்க்கரீதியில் முடிவுகளை எடுப்பது, சூழ்நிலை மற்றும் நுணுக்கங்களை உணர்வது, மற்றும் அறிந்த முடிவுகளை எடுப்பது போன்ற திறன்களை குறிக்கிறது.
நீண்ட காலமாக, வலுவூட்டப்பட்ட கற்றல் (reinforcement learning) மற்றும் சங்கிலி எண்ணத் தூண்டல் கட்டளை (chain-of-thought prompting) போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி, மேலும் புத்திசாலியாகவும், ஆராயும் திறனுடன் கூடியதாகவும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக, கூகுளின் முதல் சிந்திக்கும் மாதிரியான ஜெமினி 2.0 மின்னல் சிந்தனை( Flash Thinking) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ஜெமினி 2.5 மூலம், மேலும் மேம்பட்ட அடிப்படை மாதிரியை மேம்பட்ட பயிற்சி நுட்பங்களுடன் இணைத்து, புதிய செயல்திறன் நிலையை அடைந்துள்ளது. இதன்மூலம் அவை மேலும் சிக்கலான பிரச்சனைகளை கையாள முடியும். தற்போது சோதனைக்கட்டத்தில் உள்ள ஜெமினி 2.5 ப்ரோ, இணைய உலாவி விரிவாக்கங்கள், கோப்பு பதிவேற்றம் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்குதளங்களுக்கான பயன்பாடுகளுக்கு கிடைக்கும்.
தமிழ், ஜப்பானிய மொழி, அரபு மொழி போன்ற சிக்கலான நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கூகுள் ஜெமினி ஆதரிக்கிறது. இதன் மூலம், மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் சுருக்கம் போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம். மேலும், சிக்கலான கணிதக் கணக்குகளை தீர்க்கவும் தர்க்கத் தொடர்புடைய புதிர்களை பகுப்பாய்வு செய்யவும் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதைப்பயன்படுத்தலாம்.
கூகுளின் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தில் மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்படும் ஜெமினி 2.5 புரோ (பரிசோதனை கட்டம்), செயற்கை நுண்ணறிவு செயல்திறனை ஒப்பிடும் அடிப்படையான தரவரிசையில் (LMArena) முதலிடம் பிடித்தது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்த இலவச வெளியீட்டு செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே கூகுளின் முதன்மையான நோக்கமாக உள்ளது.


