டூ மினிட் நூடுல்ஸ் ஊடகங்கள்!
ஊடகவியலாளர்களுக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் கூறி விட்டால் உள்நாட்டுக் கலவரமே வெடித்து விடும் என்று சற்று மிகைப்படுத்தி ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் கூறினேன். காலம், இடம், சூழல் ஆகியவை கருதியும், சமூகப் பொறுப்புணர்வு, ஊடக நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், அரசியல் பொருளாதார நலன்கள் ஆகியவற்றால் சலிக்கப் பட்ட செய்திகள்தான் வெளியே வருகின்றன. செய்தித்தாள் போன்ற பாரம்பரிய ஊடகங்களில் பல எச்சரிக்கையுணர்வுடன் கூடிய செக்போஸ்டுகளைத் தாண்டியும் அவை வருகின்றன.

செய்திகளை முந்தித் தருவது தினத்தந்தி என்று கூறிக்கொண்டாலும் அடுத்த நாள் காலையில்தான் செய்தியைப் படிக்க முடியும். தொலைக்காட்சிகள் வந்த பிறகு 24 ம்ணிநேரமும் செய்தி சொல்ல வேண்டிய போட்டியில் பல தடுப்புகள் உடைந்து போகின்றன. ஒரே செய்தியை நோக்கி அனைவரும் ஓடுவது ஊடகத்தின் பன்முகத் தன்மையை பாதிப்பதோடு, உறுதி செய்யப்படாத தகவல்களைக் கூட பரபரப்பாக வெளியிடுவது வழக்கமாகி விட்டது.
சமூக வலைத்தளமும், இணையமும் இந்த உடனடி டு மினிட் நூடுல்ஸைத்தான் சூடாக வழங்கி வருகின்றன. இதில் முதலில் அடிபடுவது நம்பகத்தன்மைதான். ஒரு சம்பவத்தைக் குறித்து உடனடியாகக் கருத்துச் சொல்லியாக வேண்டும் கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டு விடுகிறது. அப்படிச் சொல்லவில்லையென்றால் கள்ள மவுனம் என்று குற்றச்சாட்டு வைக்கப்படும்.
இதில் அதிகம் பொறுப்பற்றுத் திரிவது சில ஊடகவியலாளர்கள்தான் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. இவ்ற்றில் அரசியல் அஜெண்டாவும் சேரும் போது விஷமாகி விடுகிறது.இதில் இழப்பு இந்த ஊடக எலிகளின் நம்பகத் தன்மைதான்.


