லட்சத்தீவில் என்னதான் பிரச்னை?,

லட்சத்தீவில் என்னதான் பிரச்னை?,

கப்பட்ட பிரபலங்கள் தொடங்கி ஆக்டருங்க – குறிப்பா மோலிவுட் ஆர்டிஸ்டுங்க #SaveLakshadweep அப்படீங்கற ஹேஷ்டேக்குடன் லட்சத்தீவிற்கு ஆதரவா தங்களோட அப்செட் குரலை வெளிப்படுத்தி வாராங்க.. கேரளா சி. எம் . தொடங்கி நடிகர் பிருத்விராஜ்,, இப்போ ரஹ்மான் வரை வெளிப்படுத்தி இருக்கும் கண்டனத்தை கட்டிங் கண்ணையா பார்வைக்கு அனுப்பி ஃபுல் ரிப்போர்ட் ப்ளீஸ் என்று கேட்டிருந்தேன்  நம்ம  கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ரிப்போர்ட் இதோ:

36 தீவுகள் மட்டுமே கொண்ட அதிலும் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிப்பதுதான் லட்சத்தீவு. மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் லட்சத்தீவு முக்கியமானது. கடலின் அழகோடு இயற்கை கொஞ்சும் நிலப்பரப்பு, பவளத்தீவுகள் எனக் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கவரத்தியில் உள்ள மீன் அருங்காட்சியகம் கவனத்தை ஈர்க்கிறது. இந்த தீவின் மக்கள் தொகை 65,000 பேர். 96 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். மொத்த பரப்பு 32 சதுர கி.மீ. கவரத்தியில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்குக் கடலில் இந்தியாவின் கடல் வழித்தடங்களைக் கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உகந்த இடமாக லட்சத்தீவுகள் உள்ளன. இந்தியத் தீபகற்பத்துக்கு வெளியே நாட்டைக் காக்கும் காவல்காரர்களைப்போல பரவி நிற்கிறது லட்சத்தீவு. அரபிக்கடலில் இப்படி ஒரு தீவுக் கூட்டம் இருப்பது வெளியுலகுக்குத் தெரியவந்த கதையை கேட்டால் அடடே என்பீர்கள்.

இஸ்லாம் மதம் மீது ஏற்பட்ட பற்று காரணமாக, சேர வம்சத்தின் கடைசி அரசர் சேரமான் பெருமாள் ரகசியமாக அரேபிய வர்த்தகர்களின் கப்பலில் ஏறி மெக்காவுக்குச் சென்றார். இதை அறிந்து அவரைத் தேடிச் சென்ற குழுவினர், புயலில் சிக்கி நடுக்கடலில் தீவு ஒன்றில் (தற்போதைய பாங்காராம் தீவு) தஞ்சம் புகுந்தனர். புயல் ஓய்ந்ததும் மீண்டும் கண்ணனூர் கிளம்பினார்கள். வழியில் மேலும் சில தீவுகளைப் பார்த்தார்கள். நாடு திரும்பியதும் இதுகுறித்து அரசனிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து, அங்குக் குடியேறி விவசாயம் செய்யும் மக்களுக்கு அந்த நிலம் சொந்தம் என அரசன் அறிவித்தார். அதனால் அமினித் தீவில் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது என்கிறது உள்ளூர் கதை. ஆனால், எந்த ஆதாரமும் இல்லை.

இந்த தீவுகளை பல்லவ ராஜ்ஜியமும் சோழர்களும் அடுத்தடுத்த காலகட்டங்களில் ஆண்டுள்ளனர். போர்த்துகீசியர்கள், கொளத்துநாடு வம்சம், சிராக்கல் மற்றும் அராக்கல் மன்னர்கள் எனப் படிப்படியாகத் தீவுகள் கை மாறின. 1783-ல் மைசூர் அரசன் திப்பு சுல்தான் வசம் அமினி குழுமத்தீவுகள் சென்றன. 1799-ல் ரங்கப்பட்டினம் போரில் திப்புவை வீழ்த்திய ஆங்கிலேயர்கள் மைசூரையும் அமினி தீவுக்கூட்டங்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில் சிராக்கல் ராஜா நிர்வகித்து வந்த அன்டோர்ட் தீவு 1847-ல் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய ஆங்கிலேய அதிகாரி வில்லியம் ராபினிடம் சிராக்கல் ராஜா வட்டிக்குக் கடன் பெற்றார். 4 ஆண்டுகளில் வட்டி பெருகிட, கடனுக்கு ஈடாக மீதமுள்ள தீவுகளும் ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்கப்பட்டன. அது முதல் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் வசமாகின. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை அமலாக்கி வெற்றி கண்ட பரிசோதனைக் களம்தான் லட்சத் தீவு. இதையே இந்தியாவிலும் அமலாக்கி வெற்றியும் கண்டார்கள்.

இந்தியா விடுதலை ஆன பிறகு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி இது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப் பட்டது. 1973-ல்தான் இதற்கு லட்சத்தீவு எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்திய யூனியன் பிரதேசங்களில் இது மிகச் சிறியது. பவளப்பாறைகள் நிரம்பிய ஒரே தீவுக்கூட்டம். இதன் மொத்தப் பரப்பு 32 சதுர கி.மீதான். 12 பவளத் தீவுகள், 3 திட்டுகள் மற்றும் 5 நீரில் மூழ்கிய பகுதிகள் காணப்படுகின்றன. அகத்தி, அன்டோர்ட், பிட்ரா, செட்லட், காட்மாத், கல்பேனி, கவரத்தி மற்றும் கில்டன் ஆகிய தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். பல தீவுகளில் மனித நடமாட்டமே இல்லை. மொத்த தீவுக்கூட்டமும் ஒரே மாவட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தலைநகரம் கவரத்தி. நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இப்பேர்பட்ட லட்சத்தீவில் என்னதான் பிரச்னை?,

முந்திய பேராவில் சொன்னது போல் போன ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ் தினேஷ்வர் ஷர்மா (Dineshwar Sharma) செயல்பட்டு வந்தார். இவர் டிசம்பர், 4 திடீரென காலமானதையடுத்து, மோடியின் மத்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் (Praful Khoda Patel) என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிச்சு அதை ஜனாதிபதி ஒப்புதலும் பண்ன வச்சி பொறுப்பேற்க அனுப்பியது .அதை அடுத்து லட்சதீவு இன்சார்ஜ் ஆன பிரஃபுல் கோடா படேல் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு எதிராக மன நிலையை ஏற்படுத்து வருகிறது. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது பிரபுல் படேல் குஜராத்தின் மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரஃபுல் கோடா பட்டேல் உத்தரவுப்படி கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால், இரண்டு நாட்களுக்குள் லட்சத்தீவிற்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால் ஜனவரி வரை ஒரு கொரோனா தொற்றுக் கூட இல்லாத தீவாக இருந்த லட்சத்தீவில், தற்போது 5000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி லட்சத்தீவில் இதுவரை கொலை, கொள்ளை, கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படாத நிலையில், தற்போது குண்டாஸ் சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லட்சண தீவு என்று பெயரெடுத்த லட்சத்தீவில் இதுவரை மதுபானங்களுக்குத் தடை நிலவிவந்த நிலையில் தற்போது, மதுபான விற்பனையைத் தொடங்க முடிவெடுத்துள்ளது

இதை எல்லாம் விட முக்கியமாக முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி நீக்கியுள்ளது.

இப்படியாக ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்வதையடுத்து, அங்குள்ள மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இது போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்தான் தற்போது பலத்த சர்ச்சையாகி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தற்போது லட்சத்தீவு காப்பாற்றப் பட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நிலவளம் ரெங்கராஜன்