அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்!

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜன நாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய தமிழ் வம்சா வளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஆவர். அவருடைய அப்பா ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவைச் சேர்ந்தவர். அவருடைய அம்மா இந்தியாவைச் சேர்ந்தவர். கமலா, தற்போது அமெரிக்கா செனட் உறுப்பினராக இருந்துவருகிறார். கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாட்டு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3–ம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா ஹாரிஸ். இவருக்கும் குடியரசு கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் அக்டோபர் 7–ம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பு 2 முறை மட்டுமே, பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். 2008ம் ஆண்டு குடியரசு கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் பெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இரண்டுமே அதிபர் வேட்பாளராக கருப்பின பெண்ணை நிறுத்தியதில்லை. இதுவரை யாரும் அதிபராக இருந்ததும் இல்லை.

கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது, இந்திய வம்சாவளி பெண். கமலா அதாவது கமலம் என்றால் தாமரை என்று அர்த்தம். தாமரை இந்திய கலாச்சாரத்தின் சின்னம். (வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவள் கல்விக் கடவுள் சரஸ்வதி) நீருக்கடியில் மலர்வது தாமரைச் செடி. நீர்மட்டத்துக்கு மேலே மலர்வது தாமரைப்பூ. தண்ணீருக்கடியில் சேற்றில் அடி வேரூன்றிருப்பது அதன் வேர் என்று தன் பெயர்க் காரணத்தை அவர் அழகாக விளக்கிச் சொல்வார்.

ஓக்லாண்டில் 1964–ம் ஆண்டு பிறந்தவர். தாய் – இந்திய டாக்டர். சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்கா நாட்டு பொருளாதார நிபுணர்.இந்திய வம்சாவளி என்பதால் இந்திய உணவும் அவருக்குப் பிடித்தது. அரிசி, தயிர், உருளைக்கிழங்கு கறி, இட்லி, பல வகை பருப்பு… அவரது சாப்பாட்டில் உண்டு. தனக்குப் பிடித்தவை இவை என்று அவர் பட்டியலிடுகிறார். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.

கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 4 ஆண்டு ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றதுடன் அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்ணி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார். 2003–ம் ஆண்டு சான் பிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னிஜெனரல் ஆனார்.

அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். மேலும் கலிபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!