தி(மு)க வின் பார்ப்பன எதிர்ப்பு பொய், சமூகநீதி-சாதி ஒழிப்பும் பொய்!!

தி(மு)க வின் பார்ப்பன எதிர்ப்பு பொய், சமூகநீதி-சாதி ஒழிப்பும் பொய்!!

இப்படித்தான் 1969-70- ல் ஒரு சம்பவம்!. அப்போது கலைஞர் முதல்வர். நாவலர் நெடுஞ்செழியன் என்கிற நாராயணசாமி (உண்மைப் பெயர்) கல்வி மந்திரி. ஒரு இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்டு, “நாங்கள் இல்லை என்றால் உங்களை சீண்டுவாருமில்லை. தீண்டுவாருமில்லை” என்று பேசிவிட்டார்.

அப்போது இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக இருந்த, ஆரிய சங்காரன். (ஆரியர்களை அழிப்பவன்) ஆள் கொஞ்சம் டெர்ரர். உடனடியாக மேடை போட்டு, “ஏ..நா கொழுப்பு நாராயணசாமி, அடக்கிப் பேசுங்கள். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் உங்களுக்கு நாக்கு இருக்காது’ என்று எச்சரித்தார். தமிழ்நாடு முழுதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். மிரண்டு போன நாவலர் (நாராயணசாமி) பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

திராவிடத்தின் நா கொழுப்பிற்கு, முன்னமே இப்படி ஒரு வரலாறு உண்டு. ஐம்பதாண்டுகள் கழித்து ஆர்.எஸ். பாரதி மீண்டும் அப்படி பேசியிருக்கின்றார். பேசட்டும்!

நரி, என்ன தான் ராஜா வேடம் போட்டாலும், பெருமழையில் நனைந்து நரியாகி நின்று ஊளையிடும் கதையை கேட்டுள்ளோம். அப்படித் தான் திராவிடத்தின் முற்போக்கு பாரதிகள் அவ்வப்போது வேஷம் கலைந்து நரியாக ஊளையிட்டு நிற்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவருக்கு ’நீதிபதி பதவியை பிச்சையைப் போட்டது திராவிடம் தான்’ என பேசியது மட்டுமல்ல, மறுப்பு சொல்கிறேன் பேர்வழி என்று ‘என் உதவியாளர் அரிஜனன், ஓட்டுனர் அரிஜனன், என்னைச் சுற்றி அரிஜனன்” என மேலும் ‘சமூகநீதி-சாதி ஒழிப்பை பேசியிருக்கிறார் ஆர்.எஸ் பாரதி அவர்கள்.

அரிஜனன் என்றால் கடவுளின் குழந்தை. கடவுளே இல்லை என்று மறுக்கும் திராவிடம் எப்படி அரிஜனன் என்ற வார்த்தையை மட்டும் ஏற்கிறது? அது தான் மரபணுவில் ஒட்டியிருக்கும் சாதிய சிந்தனை!

இந்த அரிஜனன் என்ற வார்த்தையை, காந்திக்கு முன்பாகவே நான்சிமேத்தா என்ற குஜராத்தி கவிஞன் தான் குறிப்பிட்டான். கணிகை பெண் ஒருத்திக்கு (தேவதாசிக்கு) பிறந்த குழந்தையை அப்படி அரிஜனன் (கடவுளின் குழந்தை) என குறிப்பிட்டார். அதை படித்த காந்தி தனது பத்திரிகைக்கு ‘அரிஜன்’ என பேர் வைத்தார்.

அதற்கு எதிர்வினையாற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனன்) கடவுளின் குழந்தை என்றால், நீங்கள் எல்லாம் சாத்தான்களின் பிள்ளைகளா என்றார். பின்னாளில் உ.பி. முதல்வராக இருந்த மாயாவதியும் அப்படி கேட்க, பெரும் பரபரப்பானது.

போகட்டும்…

கேரளாவிலிருந்து கே.ஜி. பாலகிருஷ்ணன், ஆந்திராவிலிருந்து வி.இராமசாமி, மேற்கு வங்கத்தி லிருந்து ரே, மகாராஷ்டிராவிலிருந்து குஷன் கௌவாய் ஆகியோரெல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்கின்றார்கள். அந்த மாநிலத்தைச் சேர்ந்த எந்த கட்சியும், ‘தாழ்த்தப்பட்டவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கியது, நாங்கள் போட்ட பிச்சை’ என்று கூறவில்லை.

ஆனால் ‘சமூகநீதி பேசும்’ திராவிட கட்சியின் பிள்ளைகள் அப்படி கூறுகின்றார்கள். சுதந்திரத்திற்கு முன்பே, 1940-ல் சென்னை சட்டக்கல்லூரியின் பேராசிரியராக ராவ்பகதூர் சிவசங்கரன் என்ற தாழ்த்தப்பட்டவர் இருந்துள்ளார். அன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பிரிக்கப்படாத சென்னை ராஜதானியின் சட்டக் கல்லூரி அது ! மிக முக்கியமான வழக்கில் வாதாடச் சென்றால், அவரைப் பார்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுந்து நின்று வணங்குவது வாடிக்கை! காரணம் அவர்கள் சிவசங்கரனின் மாணவர்கள் என்றதால். ஆனால், அந்த வெள்ளைக்கார அரசு, ‘நாங்கள் போட்ட பிச்சை’ என்று எங்கேயும் சொன்னதில்லை.

1947-ல் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (தெலுங்கர்), திண்டிவனத்தைச் சேர்ந்த குலசேகர தாஸ் என்ற ஆதித் தமிழனை முதன் முதலாக திருப்பதி கோயில் அறங்காவர் குழுத் தலைவராக நியமித்தார். இந்தியாவிலேயே அது தான் முதன் முறை. மிகப்பெரிய புரட்சி! அந்த ஓமந்தூரார், ‘இது நாங்கள் போட்ட பிச்சை’ என்று எங்கேயும் பிரச்சாரம் செய்ததில்லை. அப்படி பிரச்சாரப்படுத்துவது வெட்கக்கேடு என நினைத்தார்கள்.

ஆனால் சமூகநீதி பேசிய திராவிடம் ‘பிச்சை’ என்கிறது ?

1954—ல் பெருந்தலைவர் காமராஜர் முதல்வரான பிறகு பி.ஆர். பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவரை ‘இந்து அறநிலையத் துறைக்கு அமைச்சராக்கினார். எந்த கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்கூடாது என்றார்களோ, அந்த கோயில்களுக்கெல்லாம் அமைச்சராக நியமித்தார். தியாகி கக்கனை உள்துறை அமைச்சராக்கினார். அந்த காமராஜரும்- காங்கிரஸும், ‘நாங்கள் போட்ட பிச்சை’ என்று எங்கேயும் சொன்னதில்லை. அதைச்சொல்லி அரசியல் பிழைப்பும் நடத்தவில்லை.

ஆனால், சமூகநீதியை பேசி வளர்ந்த திமுக ‘திராவிடம் போட்ட பிச்சை’ என திரிக்கின்றது.

சரி, அப்படி சொல்வதிலாவது உண்மை உள்ளதா என்றால் இல்லை. நீதிபதி வரதராஜன் சட்டம் முடித்து, வழக்கறிஞரான காலகட்டத்தில், இந்த திராவிட கரகாட்ட கோஷ்டிகளே, ‘அதிகார பிச்சை’ எடுத்துக் கொண்டிருந்தது என்பதே உண்மை.

சுதந்திரத்திற்கு முன்பே,1940-41 களில் கல்லூரி படிப்பை முடித்த வரதராஜன் அவர்கள் 1944-ல் வழக்கறிஞராக வந்துவிட்டார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு 1949- நவம்பரிலேயே உரிமையியல் நீதிபதியாகிவிட்டார்.

அதன் பிறகு இரண்டு மாதம் கழித்துதான் பெரியாரை விமர்சித்துவிட்டு வந்த அண்ணா திமுக-வை தொடங்கினார். திமுக-வின் நிலையே அப்போது ‘கையேந்திக் கொண்டிருந்த நிலை” தான். அதாவது பிச்சை!

1957-ல் தான் திமுக முதன் முதலாக தேர்தலை சந்திக்கின்றது. அப்போதே வரதராஜன் அவர்கள் சார்பு நீதிபதியாக வந்துவிட்டார். அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாக-முறையாக உயர்ந்து 1968-ல் மதுரை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதியாகவும், அடுத்தாண்டு தொழில்துறை தீர்ப்பாய நீதிபதியாகவும் உயர்ந்தார். திமுக அப்போதுதான் அதிகாரத்திற்கு வந்து, ஓராண்டு ஆகியிருந்தது. “ரூபாய்க்கு ஒரு படி அரிசி நிச்சயம் மூன்று படி லட்சியம்” என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என தினறிக் கொண்டிருந்த காலம் அது.

அப்படி உயர்ந்த நீதிபதி வரதராஜன் அவர்கள் 1973 பிப்ரிவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். அவருக்கு முந்திய சீனியர்கள் யாரும் அப்போது இல்லை. அடுத்த ஆண்டே அவர் தகுதி அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கான பட்டியலில் வந்துவிட்டார். தகுதி- மூப்பு அடிப்படையில் அவர்தான் நீதிபதி என்று பரிந்துரைக்கின்றார். மாநில முதல்வரும் குடியரசுத் தலைவரும் அதை பரிந்துரைத்தாக வேண்டும் என்பது நடைமுறை!

ஆனால் கலைஞர் அதை உடனடியாகச் செய்யவில்லை. வேறு ஏதாவது ஒரு பதவியைக் கொடுக்கலாம் என காலம் தாழ்த்தினார். சத்தியவாணி முத்து அம்மையார் அழுத்தம் கொடுக்கவே வேறு வழியின்றி 1974-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறாண்டுகள் நீடித்த பிறகு சீனியாரிட்டி அடிப்படையில் 1980-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகச் சென்றார். இது தான் நடந்தது. இதில் எங்கே திமுக பிச்சை போட்டது?. தகுதியில்லா ஒருவருக்கு வலிய சென்று பதவி வாங்கி கொடுத்தார்களா என்ன?

எப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரம் இது?

காமராஜரையும் பிரதமர் நேருவையும் விட்டுவிட்டு ”இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுத் தந்ததே பெரியார் தான்” என்ற உருட்டுக் கதை பேசுவதைப் போல் பட்டியலின நீதிபதி வரதராஜன் அவர்கள் விடயத்தையும் திரிக்கப் பார்க்கிறார்கள். பட்டியலின கட்சிகள், இதை தொடக்கத்திலேயே கண்டித்திருக்க வேண்டும்.

சரி, இந்த விவகாரத்தில் ‘பெரியார் மடத்தை’ சேர்ந்த ஒருவரும் பேசக்காணோமே ஏன்? யார் அவர்களை தடுத்தார்கள் ?. மதிப்பிற்குறிய ஐயா வீரமணியும், மதிப்பிற்குறிய ஐயா சுபவீயும், இன்னும் பல பெரியாரிஸ்ட் தலைவர்களும் எங்கே சென்றார்கள்? இது என்ன ரகம்?

நடிகை நயன்தாராவை, ராதாரவி தவறாக பேசினார் என்று போது கட்சி கொதித்ததே, கட்சியில் இருந்து அவரை நிரந்தரமாக கழட்டி விட்டார்களே, அது யாருக்காக?. இப்போது ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தையே கொச்சைபடுத்தியும், கட்சியைவிட்டு நீக்காமல் வைத்திருக்கிறீர்களே ஏன்? தலைமை கண்டித்து அறிக்கை விடவில்லையே ஏன்?

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.

1978-ல் எம்.ஜி.ஆர். இடம் கலைஞர் தோற்றபோது, “தாழ்த்தப்பட்ட மக்கள்தான் வாக்களித்து எம்.ஜி.ஆரை வெற்றிபெற வைத்தார்கள்” என்றார். இது வரலாறு. மீண்டும் ஒரு தோல்வியை அப்படி எதிர்கொள்ளாதீர்கள்.?

இறுதியாக ஒன்று!

பீகாரில் பூலே பஸ்வான், உத்தர்பிரதேசத்தில் மாயாவதி, மகாராஷ்டிராவில் ஷிண்டே, மத்திய பிரதேசத்தில் அமர்சிங், ஆந்திராவில் சஞ்சீவய்யா, குஜராத்தில் ஜெகநாத் பகாடியா ஆகிய பட்டியலின-தலித் தலைவர்கள் முதலமைச்சராகி விட்டார்கள். அங்கு, பெரியாரும் இல்லை. பெரியார் மண்ணும் இல்லை. அதனால் சாத்தியமானது.

சமூகநீதி- சாதி ஒழிப்பு என பேசும் உங்களிடத்திலிருந்து அப்படி ஒருவரை முதல்வராக்க முடிய வில்லையே ஏன்? காரணம், உங்களின் பார்ப்பன எதிர்ப்பு பொய், சமூகநீதி-சாதி ஒழிப்பும் பொய்!! என்பதுதான்.

தகவல் ஆதாரங்கள்.
——————-
வே.ஆணைமுத்து அவர்களின் தொகுப்புகளில்,..
டாக்டர் செ.கு.தமிழரசன் பேட்டி- ‘எழுச்சி’ புத்தக தொகுப்பு…
திருச்சி வேலுசாமியின், ‘அரசியல் ஆடுகளம்’ தொகுப்பிலிருந்து

பா.ஏகலைவன். பத்திரிகையாளர்.

error: Content is protected !!