நாடெங்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கிடையே உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதே சமயம் அவரது தங்கை பிரியங்கா உன்னாவ் மற்றும் பாரபங்கி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் இருவரும் நேற்று கான்பூர் விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது பிரியங்கா தோள் மீது கைபோட்டு பேசிக் கொண்டிருந்த ராகுல் நகைச்சுவையாக பேட்டியும் அளித்தார். அப்படி அந்த விமான நிலையத்தில் பிரியங்கா காந்தியை தோளில் கை போட்ட ராகுல் காந்தி தன் தங்கையை கேலி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அவர் கூறுகையில், ‘‘நல்ல சகோதரனாக இருப்பது என்றால் என்ன? என நான் சொல்கிறேன். நான் நீண்ட தூரம் பயணம் செய்ய சிறிய ஹெலிகாப்டரில் செல்கிறேன். ஆனால் பிரியங்கா சிறிய தூரம் பயணம் செய்ய பெரிய ஹெலிகாப்டரில் செல்கிறார். ஏனென்றால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன்’’ என நகைச்சுவையாக கூறினார்.
இதை மறுத்த பிரியங்கா, ‘‘அப்படியெல்லாம் இல்லை. நானும் ஒரு மணி நேரம் பயணம் செய்கிறேன்’’ என்றார். இந்த வீடியோ காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட ராகுல், ‘‘கான்பூர் விமான நிலையத்தில் பிரியங்காவுடனான சந்திப்பு அருமை’’ என பதிவிட்டுள்ளார். அந்த அந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, இருவரும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.