இந்திய டி20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளாரா அல்லது தற்காலிகமாக இரு தொடர்களுக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அணியில் இருந்து எம்.எஸ். தோனி நீக்கி தேர்வுக் குழு நேற்று அதிரடியாக அறிவித்தது. இந்த முடிவை எடுக்கும் முன் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விரிவாக ஆலோசித்த பின்புதான் எடுக்கப்பட்டதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார். மேலும், தோனி டி20போட்டி வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்றும் பிரசாத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால், தோனிக்கு இரு தொடர்களுக்கு மட்டும் ஓய்வு அளித்து இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதா அல்லது டி20 அணியில் இருந்தே தோனி முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டாரா என்ற குழப்பம் அவர்களின் ரசிகர்களுக்குத் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில், தோனியை அணியில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது தற்காலிக ஓய்வா என்பது குறித்து ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பிசிசிஐ அமைப்பின் முக்கிய நிர்வாகி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

தோனிக்கு தற்போது அளிக்கப்பட்டு இருப்பது ஓய்வு அல்ல நீக்கம். இளைஞர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு அளிக்கும் நோக்கிலும், 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்தும் நோக்கிலும் தோனியை அணி நிர்வாகம் நீக்கி இருக்கிறது. அவருக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை.

இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் தோனியை அணியில் இருந்து நீக்கும் முன், அணியின்நிர்வாகம் மூலம் தோனிக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அணியில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது, நீங்கள் விலகிக்கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை டி20 போட்டியில் விளையாட உற்சாகப்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், அனைவருக்கும் ஒரு விஷயம் தெரிந்ததுதான். தோனிக்கு இப்போதும் இருக்கும் வயதில், உடல்நிலையில், 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டிவரை அவரால் விளையாட முடியாது. ஆதலால், தோனி இடத்தில் அடுத்த விக்கெட் கீப்பரையும், மாற்று வீரர்களையும் தேட வேண்டிய நிலையில் அணி நிர்வாகம் இருக்கிறது. அதற்கான அதிரடி நடவடிக்கைதான் தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ஓய்வு அல்ல. ஓய்வு என்பது தற்காலிகமானது எனத்தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தோனி தற்போது ஒருநாள் தொடருக்கான அணியில்மட்டும் இடம் பெற்றுள்ளார். அதிலும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான தொடரில் மிக மோசமாக பேட் செய்து வருகிறார். தோனியின் பேட்டிங்கில் இதே நிலை தொடர்ந்து நீடித்தால், விரைவில், தோனிக்கு இந்திய அணியில் இருந்து நிரந்தரமான ஓய்வை அணிநிர்வாகம் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

error: Content is protected !!