வருங்கால வாக்காளர்களைத் தரமானவர்களாக உருவாக்கும் முன்முயற்சிகளில் – விஜய்!

வருங்கால வாக்காளர்களைத் தரமானவர்களாக உருவாக்கும் முன்முயற்சிகளில் – விஜய்!

மிழ்த் திரையின் முதல் வரிசை நடிகர்களில் முதன்மையானவராக கொண்டாடப்படும் நடிகர் விஜய், 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாகத் தேர்ந்தெடுத்து பாராட்டுச் சான்றிதழும் ஊக்கப்பரிவும் (அதாவது Stipend) வழங்கியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. நல்லது. வரவேற்கத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் “லியோ” படத்தின் “Naa Ready” என்ற சிங்கிள் பாடல் பற்றிய அறிவிப்பு முந்தைய நாள் வெளியான நிலையில், மறுநாள் – விஜய் மக்கள் இயக்கம் (VMI) சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. பத்து மணி நேரம் கடந்தும் நீடித்த இந் நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விஜய் சான்றிதழும் உதவித் தொகையும் வழங்கியிருக்கிறார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் பற்றிய புரிதல் மாணவர்களுக்குத் தேவை என்று கூறியுள்ள விஜய், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரும் நிலையைச் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டிருக்கிறார். மேலும், “அடுத்தடுத்த ஆண்டுகளில் நீங்கள்தான் முதல்முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இதுபோன்ற நிலை மாறும்போதுதான் உங்கள் கல்விமுறை முழுமை அடைந்ததாகக் கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வருங்கால வாக்காளர்களைத் தரமானவர்களாக உருவாக்கும் முன்முயற்சிகளில் – விஜய்யின் பங்காக இதைப் பார்க்கலாம்.

தாம் நடிகராகவில்லையென்றால் டாக்டராகியிருப்பேன் என்று கூறவிரும்பவில்லை, தமது கனவு சினிமாதான் என்று கூறியிருக்கும் விஜய், “நிலத்தை எடுத்துக்கொள்ளலாம். கல்வியை உன்னிடமிருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்ற திரைப்பட வசனத்தின் பாதிப்பில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். (தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “அசுரன்” படத்தில் இடம்பெற்ற வசனம் அது. வெளியான ஆண்டு: 2019.)

குறிப்பாக, “பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வி அல்ல. அதையெல்லாம் கற்று, மறந்து இறுதியில் நம்மிடம் எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் கல்வி” என்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை மாணவர்களுக்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறார். விஜய், ஆயத்தமாக இருப்பது போலத்தான் தெரிகிறது.

இளையபெருமாள் சுகதேவ்

error: Content is protected !!