மோடியை விட ‘இந்த லேடி’ பெஸ்ட்! – ஜெயலலிதா பட்டியலிட்டு பெருமிதம்

மோடியை விட ‘இந்த லேடி’ பெஸ்ட்! – ஜெயலலிதா பட்டியலிட்டு பெருமிதம்

”இந்திய அளவில் சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா? அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் தமிழகத்தின் இந்த லேடிதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டார்.தென் சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து, பெருங்குடியில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் குஜராத் மாநிலத்தை தமிழகத்துடன் ஒப்பிட்டு பல்வேறு துறைகளின் மனிதவளக் குறியீடுகளைப் பட்டியலிட்டு அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியைவிடத் தானே சிறந்த நிர்வாகி என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
modi and-jayalalitha-
கடந்த சில நாட்களாக பிஜேபியை தாக்கி வந்த ஜெயலலிதா சென்னை தேர்தல் பிரசாரத்தின் போது மோடியை மட்டம்தட்டி பேசி வெளியிட்ட பட்டியல் விவரம் இதோ-

“”ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்றிருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை எளிய நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்தும் கண்ணாடியாக விளங்குபவை மனிதவளக் குறியீடுகள். விளம்பர வளர்ச்சி எது என்பதையும், உண்மையான வளர்ச்சி எது என்பதையும் இந்த மனிதவளக் குறியீடுகள் தெளிவுபடுத்தும். குஜராத்துடன் தமிழகம் ஒப்பீடு: குஜராத்தில் 16.6 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். ஆனால், தமிழகத்தில் 11.3 சதவீத மக்கள் மட்டும்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதை அடைவதற்குள் 38 குழந்தைகள் குஜராத்தில் இறந்து விடுகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒரு வயதை அடைவதற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 21 மட்டுமே. ஒரு லட்சம் குழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம் குஜராத்தில் 122; தமிழகத்தில் இது 90தான். கடந்த 2011-12-ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 லட்சம் மெட்ரிக் டன்தான். ஆனால், தமிழகத்தில் இது 101.51 லட்சம் மெட்ரிக் டன் குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 220. ஆனால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 996. குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். அதாவது, 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிகம். 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரை குஜராத்தில் தொடங்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 16. ஆனால், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 732. மகளிருக்கு எதிரான குற்றங்கள்-குஜராத்தில் அதிகரிப்பு: கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை மகளிருக்கு எதிரான குற்றங்கள் 29 சதவீதம் குறைந்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன் பெறும் மாநிலம் தமிழகம். குஜராத்தில் இதற்கு நேர் மாறான நிலைமையே உள்ளது. பொது விநியோகத் திட்டத்திலிருந்து உணவுப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பது குஜராத்தில் 63 சதவீதம். தமிழகத்தில் இது வெறும் 4 சதவீதம்தான். தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏழை எளியோர் பங்கு பெறும் வளர்ச்சியாகும். சிறந்த நிர்வாகி யார்? வாக்காளர்களே இப்போது சொல்லுங்கள். சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா? அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் தமிழகத்தின் இந்த லேடிதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

error: Content is protected !!