மழைநீரைச் சேமிப்பதற்கு நீரூட்டல் கிணறுகள்! – குடிநீர் வாரியம் வேண்டுகோள்

மழைநீரைச் சேமிப்பதற்கு நீரூட்டல் கிணறுகள்! – குடிநீர் வாரியம் வேண்டுகோள்

பொதுமக்கள் தங்களது கட்டடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீரைச் சேமிக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
metro aug 18
இதுகுறித்து, அந்த வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் கட்டடங்களின் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை வடிகுழாய் மூலம் நேரடி பயன்பாட்டு தொட்டிகளிலும், உபரி நீரை கிணறு களிலும் சேமித்து வைக்கின்றனர். ஆனால், குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழையைச் சேமிக்கத் தவறி விடுகின்றனர்.
இதனால் மழைநீரானது, நுழைவாயில் வழியாக தெருவுக்குச் சென்று வீணாகிறது. மேலும், குடியிருப்புப் பகுதி களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவவும் ஏதுவாகிறது.

இதைத் தவிர்ப்பதற்காக வீடுகளின் நுழைவாயில் அருகே ஒரு கால்வாய் ஏற்படுத்தி அதிலிருந்து நீரூட்டல் கிணறு கள் அமைத்து, வீணாக வெளியேறும் நீரைச் சேமிக்கலாம். ஏற்கெனவே மழைநீரைச் சேமிப்பதற்கு நீரூட்டல் கிணறுகள் அமைத்தவர்கள் வீணாக வெளியேறும் நீரை அதில் சேமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 2,400 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீட்டுமனையில் ஓர் ஆண்டுக்கு பெய்யும் மழையின் அளவு 2 லட்சத்து 71 ஆயிரத்து 200 லிட்டர் ஆகும். அதில் மழைநீர் சேகரிப்பு மூலம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 720 லிட்டர் (60 சதவீதம்) நீரை பூமிக்குள் திரும்பச் செலுத்த முடியும்.

இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் குறைதல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம். தொழில்நுட்ப ஆலோசனை பெற… பொதுமக்கள் தங்களது கட்டடங்களைச் சுற்றியுள்ள மழைநீரை சேமிப்பதற்கு அமைக்க வேண்டிய கட்டமைப்புகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற சென்னை குடிநீர் வாரியத்தை 044- 28454080, 45674567 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!