பிரதமர் மற்றும் அத்வானி குறித்து விமர்சனம் செய்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே மீது பாஜகவினர் நடத்திய தாக்குதல்!

பிரதமர் மற்றும் அத்வானி குறித்து விமர்சனம் செய்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே மீது  பாஜகவினர் நடத்திய தாக்குதல்!

காராஷ்டிராவைச் சேர்ந்த பிரபலப் பத்திரிகையாளர் நிகில் வாக்லே பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகடி கூட்டணிக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையும் நிகில் வாக்லே கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவருக்கு பாரத் ரத்னா வழங்குவதை எப்படி ஏற்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அத்வானியை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு நிகில் வாக்லே தனது காரில் புணேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை சிலர் பின்தொடர்ந்துள்ளனர். இதன் பின் அவர்கள், அந்த காரை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்தனர். அத்துடன் காரை சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்தனர்.

மேலும் காரின் மேல்பகுதியில் மையை ஊற்றினர். பிரதமர் மோடி, அத்வானி குறித்து விமர்சித்ததால் இந்த தாக்குதலை பாஜகவைச் சேர்ந்தவர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு உத்தவ் தாக்கேரேவின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வந்து பாஜகவினரிடம் வாக்குவாதம் செய்து அவரை மீட்டனர்.

இதுகுறித்து நிகில் வாக்லே, ”என்னை தாக்கியவர்களை நான் மன்னிக்கிறேன். இதற்கு முன்பு நான் 6 முறை தாக்கப்பட்டேன். இது 7 வது முறையாகும்” என்றார்.

நிகில் வாக்லேவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்துள்ளார். ”உண்மையிலேயே பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் குரல் நெரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். இது தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது ஆபத்தானது” என்றார்.

முன்னதாக பிரதமர் மோடி மற்றும் அத்வானி குறித்து புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர் சுனில் தியாதர் சார்பில் விஸ்ராம்பாக் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில், நிகில் வாக்லே மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அரசையோ அல்லது ஆட்சியாளர்களையோ விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பத்திரிகையாளர் நிகில் வாக்லே பாஜகவினரால் நேற்று நேரடியாக மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!