ஒற்றையர் விழிப்புணர்வு தினம்: தனிமை ஒரு பலவீனம் அல்ல… அது ஒரு வரம்!
காதலர்களுக்கான பிப்ரவரி 14 கடந்துவிட்ட நிலையில், இன்று பிப்ரவரி 15-ஆம் தேதி ‘சிங்கிள்ஸ்’ (Singles Awareness Day) என அழைக்கப்படும் ஒற்றையர் விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. காதலில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் என்றால், தனிமையில் இருப்பவர்களுக்கும் ஒரு நாள் வேண்டும் அல்லவா? அதுதான் இன்றைய நாள்!
ஏன் பிப்ரவரி 15?
2005-ஆம் ஆண்டு முதல் முறையாகத் தொடங்கப்பட்ட இந்தத் தினம், காதலர் தினத்தின் ஆரவாரங்களுக்கு மத்தியில் தனிமையில் இருப்பவர்கள் தங்களைத் தாழ்வாக உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. சிவப்பு நிறத்திற்கு நேர் எதிரான நிறமான பச்சை நிறத்தை இன்றைய தினத்தின் அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். இது காதலுக்கு எதிரான நாள் அல்ல, மாறாக உங்கள் சுதந்திரத்தை நேசிப்பதற்கான ஒரு நாள்.

தனிமை என்பது கொண்டாட்டம்!
தனிமையில் இருப்பது என்பது ஏதோ சோகமான விஷயம் என்று கருதுவது மிகப்பெரிய தவறு. ஒரு சிக்கலான, நிம்மதியற்ற உறவில் இருந்து கொண்டு மன அமைதியை இழப்பதை விட, தனிமையில் இருப்பது எவ்வளவோ மேலானது.
-
சுய ஆய்வுக்கான நேரம்: உங்களைப் பற்றி நீங்களே புரிந்துகொள்ளவும், உங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.
-
யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை: உங்கள் நேரத்தை எப்படிச் செலவிட வேண்டும், எங்குச் செல்ல வேண்டும் என எதற்கும் யாருடைய ஒப்புதலும் தேவையில்லை. அந்தச் சுதந்திரமே ஒரு தனி சுகம்தான்!
-
சுய அன்பு (Self Love): ஷெர்லி மெக்லைன் சொன்னது போல, “நமது இருப்பைச் சரிசெய்ய இன்னொரு மனிதன் தேவையில்லை; நமக்குள்ளே இருக்கும் ஆழமான உறவை உணர்வதே முக்கியம்.”
இந்த நாளை எப்படிக் கொண்டாடலாம்?
இதற்கெனத் தனியாக விதிகள் எதுவும் இல்லை.
-
உங்களுக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து உண்ணலாம்.
-
யாருடைய குறுக்கீடும் இன்றி நீண்ட தூரம் பயணிக்கலாம்.
-
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மன அமைதியைத் திருடாத ஒரு எளிய வாழ்க்கையைத் திட்டமிடலாம்.
“ஒரு பெண் தனக்கான உலகத்தைத் தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்ற அனீஸ் நின்னின் கூற்றுப்படி, நமக்கான மகிழ்ச்சியை நாமே தேடிக்கொள்வதே புத்திசாலித்தனம். உண்மையான அன்பின் பயணம் எப்போதும் சீராக இருக்காது என்பதால், அந்தச் சிக்கலில் சிக்காமல் உங்கள் தனிமையை அனுபவிப்பதில் எந்தத் தப்புமில்லை.
எனவே, நீங்கள் தனிமையில் இருப்பவர் என்றால் இன்று தலைநிமிர்ந்து பச்சை நிற உடை அணிந்து கொண்டாடுங்கள். ஏனெனில், நீங்கள் யாருக்கும் பொறுப்புச் சொல்லத் தேவையில்லாத ராஜா/ராணி!
ரமாபிரபா


