அழுத்தமான கதையம்சத்துடன் முழுமையான கமர்ஷியலாகவும் இருக்கும் படமே ‘ஆர் யூ ஓகே பேபி’

அழுத்தமான கதையம்சத்துடன் முழுமையான கமர்ஷியலாகவும் இருக்கும் படமே ‘ஆர் யூ ஓகே பேபி’

கோலிவுட்டில் நடிகையாகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமான அவர், குணசித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரோகணம், ‘நெருங்கி வா முத்தமிடாதே’, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ளார்.. இதையடுத்து தனது 5வது படத்தை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். ‘ஆர் யூ ஓ கே பேபி’ என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இப் படத்தில் சமுத்திரகனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். . மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் லக்‌ஷ்மியின் ராம கிருஷ்ணன் தயாரிக்க, இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை தயாரிப்பாளராக இணையும் படம்.

ஆர் யூ ஓகே பேபி படம் விரைவில் ரிலீசாவதையொட்டி லஷ்மியும் அவரது கணவரும் ஏ.எல். விஜய்யுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது , “இந்த படத்தின் கதையை நான் இயக்குநர் விஜயிடம் தான் முதலில் சொன்னேன், அவர் உடனே உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்கிறேன் என்று சொன்னதோடு, எங்களுடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்தார். நான் சிறியதாக பண்ணால் கூட, மேடம் நல்லா பண்ணுங்க, பெருசா பண்ணுங்க என்று சொல்வார். அவர் கொடுத்த ஊக்கத்தால் தான் பெரிய படமானது.

இந்த படத்தை தொடங்கும் போது முன்னணி நடிகர்கள் யாரும் இல்லை. மிக சாதாரணமான ஒரு படமாக தான் தொடங்கினேன். சமுத்திரக்கனி பிஸியான நடிகர், அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. கதையை அவருக்கு அனுப்பி, அவருடைய கருத்தை கேட்கலாம் என்று நினைத்து தான் கதையை அனுப்பினேன், அவர் அதை ஒரே இரவில் படித்துவிட்டு, மறுநாள் என்னிடம் நான் நடிக்கிறேன், மேடம் என்று சொல்லிவிட்டார். நடிகை அபிராமியும் கதைக்காக தான் நடிக்க வந்தார். ரோபோ சங்கர், அனுபமா குமார், வினோதினி, நரேன், பவல் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் சேர்ந்து விட்டது. பவல் இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், முல்லை என்ற பெண்ணும் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த பெண்ணை நான் ஒப்பந்தம் செய்யும் போது, எதற்கு புதுமுகம், பிரபலமான நடிகையை போடலாமே, என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், எனக்கு அவர் மீது ஏதோ தனிப்பட்ட நம்பிக்கை இருந்ததோடு, அந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது,

அதாவது இந்தப் பாத்திரத்துக்கு சிறிய வயதில் தாயாகும் ஒரு பெண் தேவைப்பட்டாள். அதற்கான தேடலில் இருந்தபோது என்னுடைய எடிட்டர் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னார். பேப்பர் ராக்கெட் இணையத் தொடரில் நடித்திருந்த இந்தப் பெண்ணை நேரில் வரவழைத்துப் பார்த்தபோது அந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். நடிப்பில் பிய்த்து உதறி இருக்கிறார் முல்லை அரசி. எதிர்பாராத விதத்தில் குழந்தைக்கு தாயாகும் ஒரு பெண்ணின் பாத்திரம் அது. சமூகம் எப்படி எதிர்பார்க்கிறதோ அப்படி இல்லாத ஒரு விஷயத்தை இந்தச் சமூகமும் சட்டமும் முக்கியமாக மீடியாக்களும் எப்படிக் கையாளுகின்றன என்பதுதான் படத்தின் அடி நாதம்.. ஆகவே படம் ரொம்பவே எமோஷனலாக இருக்கும். அதே சமயம், கமர்ஷியலாகவும் இருக்கும். எனது படங்கள் ஏகப்பட்ட விருதுகள்  வாங்குகிறது, பத்திரிகையாளர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், அவை கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதா? என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. அந்த சந்தேகத்தை இந்த படம் சரி செய்யும் என்று நினைக்கிறேன். நிச்சயம் படம் அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக மட்டும் இன்றி முழுமையான கமர்ஷியலாகவும் இருக்கும்.

இளையராஜா சார் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவருடைய தீவிர ரசிகை நான். படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் போது என்னை பக்கத்தில் உட்கார வைத்து அவர் பணியாற்றிய விதம், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிப்பது, என்று அவர்களுடைய அந்த நடைமுறையே புது அனுபவமாக இருந்தது.” என்றார்.

மேலும் இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அது பற்றி லஷ்மி, “நான் கேட்டவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார் மிஷ்கின். என் மீதான நம்பிக்கை அது…” என்றவர், “இந்தப் படத்தில் கிளைமாக்ஸ்சில் 20 நிமிடங்களுக்கு ஒரு கோர்ட் சீன் வருகிறது. மிகவும் ஹைலைட்டான அந்த காட்சியில் நீதிபதியாக நடித்திருக்கிறார் நரேன். அந்த ஒரு காட்சியில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் டப்பிங் பேசும்போது அவரே அறியாமல் கண்கலங்கி விட்டார். அதுவே இந்தப் படம் சரியாக வந்திருக்கிறது என்பதற்கான சாட்சி..!” என்றும் குறிப்பிட்டார்.

இப்படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் விஜய் படம் பற்றி, “என்னுடைய பொய் சொல்ல போறோம் படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார் லஷ்மி ராமகிருஷ்ணன். அப்போதிலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் செட்டில் நடித்தோம், சென்றோம் என்று இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் என்னிடம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பார். அதுவே எனக்கு ஆச்சரியமாக இருக்க திடீரென்று இயக்குனராகவும் ஆகிவிட்டார். இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இது சொல்ல வேண்டிய பிரச்சனை தான் என்பதை புரிந்துக்கொண்டேன். இப்போது அதிகமாக இந்த பிரச்சனை நடக்கிறது, ஆனால் இதுவரை யாரும் இதை திரைப்படங்களில் சொல்லவில்லை. மேடம், இதை நல்ல கமர்ஷியல் படமாகவும், எமோஷ்னலான படமாகவும் இயக்கி இருக்காங்க. என்னுடைய படத்தில் தான் மேடம் அறிமுகம். சினிமாவை பற்றி எதுவும் தெரியாது, அப்போதே, நான் எடுக்கும் காட்சிகளை பார்த்துவிட்டு என்னிடம் நிறைய சந்தேகங்கள் கேட்பாங்க, எதற்கு இவங்க இதெல்லாம் கேக்குறாங்க, என்று நான் யோசிப்பேன். அதன் பிறகு அவங்க இயக்கிய ஆரோகணம் படத்தை பார்த்த பிறகு தான் அவங்களுக்குள் ஒரு இயக்குநர் இருந்ததை நான் புறிந்துக்கொண்டேன். அவங்க இயக்கிய அனைத்து படங்களும் பேசப்பட்டது. இந்த படம் அதிகமாக பேசப்படும். படத்தை நான் மட்டும் அல்ல, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட சிலர் பார்த்துட்டாங்க, அனைவரும் படத்தையும், கதையை மேடம் கையாண்ட விதத்தையும் பற்றி பாராட்டினாங்க. படம் வெளியானால் நிச்சயம் நீங்களும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடமை பாராட்டுவீங்க.” என்றார்.

error: Content is protected !!