“அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமேதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்” – ஜெ. சொன்ன கிண்டல் கதை!

“அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமேதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்”  – ஜெ.  சொன்ன கிண்டல் கதை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
jaya feb 10 a
அப்போது அவர், “அ.தி.மு.க. என்னும் மாபெரும் குடும்பத்தின் திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்துகின்ற பொன்னான வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்திருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன். மங்கலம் பொங்கும் இந்த மகிழ்ச்சிகரமான நன்னாளில், மலர்ந்த முகங் களோடு இங்கே வீற்றிருக்கின்ற எனது குடும்ப உறுப்பினர்களாகிய உங்களையெல்லாம் ஒரே இடத்தில் காண்பதிலும், உங்களிடையே உரையாற்றுவதிலும், நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம் ஆகும். வாழ்க்கை யில் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும். ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும்.

லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். எதற்கும் அச்சப்படக்கூடாது. எதிர்ப்புகளும், துன்பங்களும் நம்மை புடம் போட்ட தங்கமாக மாற்ற வேண்டும்.வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அடுத் தவர் இயல்பை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அடுத்தவர் என்ன செய்வார்கள் என்பதை அறிந்து நாம் அதற்கேற்ப செயலாற்ற இயலும்.

ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அதே பூனை அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை வருந்தவும் இல்லை.

தனக்குப் பிடிக்காத எலியை பிடிக்கிற போது இன்பம்; தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம்;தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிற போது இன்பமுமில்லை, துன்பமுமில்லை என்ற நிலை ஏற்பட்டது. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொண்டிருந்தால் அதற்கு ஏற்ப தனக்கு துன்பம் ஏற்படாத வகையில் செயலாற்றி இருக்க முடியும். மற்றவர் இயல்பை, மனதை புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ முடியும்.

உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் மாற்ற முடியாது. இதைத் தான் விவேகானந்தர் “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே” என்றார்.

அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக் கொடுக்கும். ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று “அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு” என்றான்.

உடனே தந்தை தனது மகனைப் பார்த்து “மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனயன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடம் இல்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயே தான் கற்றுக்கொள்ள வேண்டும்“ என்றார்.

தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன் “தந்தையே உங்களைப் பார்த்தே நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றான். வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார்.

மகனை அழைத்து “ஓடிப் போய் ஒரு ஏணி எடுத்துக் கொண்டு வா”” என்றார்.

“எதற்கு ஏணி?” என்று கேட்டான் மகன். “இப்படியெல்லாம் கேட்கக் கூடாது நான் சொல்வதைச் செய்ய வேண்டும்’’ என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக் கொண்டு வந்தான். “இந்த சுவற்றிலே ஏணியை சாத்தி வை. பிறகு ஏணியின் மீது ஏறி உச்சிக்கு செல். மேலே பரணியில் நான் என்னென்ன ஏமாற்று வேலைகளைச் செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பது பற்றி நெஞ்சைத் திறந்து எழுதி வைத் துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத் தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம்’’ என்றார்.

“அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கெட்டியாக பிடித்துக் கொள்” என்றான் மகன்.

“அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சிக்குப் போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த கையை எடுத்து விட்டார்.

ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்து விட்டான்.

வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன். “என்னப்பா இப்படி ஏணியிலிருந்து கையை எடுத்து விட்டாயே! உன்னால் தான் எனக்கு இடுப்பில் இப்போது அடிபட்டு இருக்கிறது” என்று கூச்சலிட்டான்.

தந்தை சிரித்துக் கொண்டே “எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?” என்று கேட்டார்.

இது தான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், “அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமே தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று முடிவெடுத்தான்.

சரி. எவ்வளவு தூரம் தான் இவன் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என நினைத்த தந்தை சிறிது விட்டுப் பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டுவிட்டார். அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காகத் தான் நான் இந்தக் கதையை இங்கு கூறினேனே தவிர, நீங்கள் யாரை யாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
jaya feb 10  b
தமிழ்நாட்டின் நலன்கள் மீதோ, தமிழக மக்களின் நலன்கள் மீதோ அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன. அவர் களது ஒரே குறிக்கோள் மக்கள் சக்தி படைத்த மாபெரும் இயக்கமாம் அ.தி.மு.க.வை வசை பாடுவது தான். நம் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் நம்மை வசை பாடுகிறார்கள். இது தான் நம் வளர்ச்சியின் அளவுகோல். “பிறர் ஏசும் ஏச்சை உர மாக்கிக் கொண்டு வளர வேண்டும்“ என்று அடிக்கடி பேரறிஞர் அண்ணா கூறுவார்.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் மரியாதையும் கொண்ட இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் நமது இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இங்கே சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

“உழைப்பால் வெற்றியை உருவாக்கு. முயற்சியை அதற்கு எருவாக்கு” என்பதற்கேற்ப, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கழகக் கண்மணிகளாகிய நீங்கள் எல்லாம் களப்பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

உங்களால் முடியாதது வேறு எவரால் முடியும்? நிச்சயம் இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்பதைத் தெரிவித்து, ‘இல்லறமல்லது நல்லற மன்று’ என்னும் இன் மொழி வழி இணைந்து உறவினர் நண்பர் புடை சூழ மணவாழ்க்கை என்னும் ஓடத்தில் பயணம் செய்யத் தொடங்கி இருக்கும் மணமக்கள், தேனின் இனிமை போலும், தமிழின் சுவை போலும் ஒருங்கிணைந்து, பெற்றோர் சுற்றத்தார் நல்லறம் காத்து, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண் டும் என்று மனதார வாழ்த்தி, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன்” இவ்வாறு ஜெயலலிதா பேசினார்

Related Posts

error: Content is protected !!