அண்ணாமலை: ஒரு தலைவரின் இரு முகம்? – கொதிக்கும் தமிழக அரசியல்!
தமிழ்நாடு அரசியலில், பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஒரு முக்கிய சக்தியாக இருந்ததில்லை. ஆனால், அந்தக் கட்சி பேரைச் சொல்லி அல்லது அக்கட்சியில் பொறுப்பேற்போர் பின்னாளில் பெரும் செல்வந்தராகி விடுவது வாடிக்கையாகிவிட்டது. உதாரணமாக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். ஒரு காலத்தில் அமைதியான அரசியல் களமாக இருந்த தமிழகத்தில், தினமும் போராட்டங்கள், அதிரடிப் பேட்டிகள், ஆடியோ வெளியீடுகள் என ஒரு புதிய அலை அண்ணாமலை தலைமையில் உருவானது. ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாடுகள், அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ஒரு நிலப் பதிவு விவகாரம், அண்ணாமலையின் பிம்பம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
‘அவனா நீ?’ – ஒரு கேள்விக்குறி
அதாவது தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ. 80 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலம் அண்ணாமலை பெயரில் வாங்கப்பட்டதாகவும், அதன் பத்திரப்பதிவு மதிப்பு ரூ. 4.5 கோடி எனவும் தகவல்கள் வெளியாகின. இது வரி ஏய்ப்பு செய்ய நடந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த விவகாரம், திமுகவோ அல்லது எதிர்க்கட்சிகளோ அல்லாமல், பாஜகவின் சொந்த நிர்வாகிகளாலேயே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டிருப்பது அரசியல் களத்தில் ஒரு ஆழமான பிளவைக் காட்டுகிறது.
இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட அண்ணாமலை, தனது நிறுவனத்தின் லாபம் குறித்து மூத்த பாஜக தலைவர் கல்யாணராமன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். கல்யாணராமனின் எக்ஸ் தளப் பதிவு, அண்ணாமலை நடத்தி வரும் ‘CORE TALENT AND LEADERSHIP DEVELOPMENT PRIVATE LIMITED’ நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டில் ரூ. 21 லட்சம் மட்டுமே என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது, பல கோடி மதிப்புள்ள சொத்தை வாங்கத் தேவையான நிதி ஆதாரம் குறித்து சந்தேகங்களை எழுப்பியது.

அண்ணாமலை ஒரு பாஜக அடையாளத்தை நீக்கிய லெட்டர் பேடில் வெளியிட்ட நீண்ட விளக்க அறிக்கை, இந்த விவகாரத்திற்கு மேலும் ஒரு புதிய கோணத்தைக் கொடுக்கிறது. அவர், தான் இயற்கை விவசாயம் மற்றும் சமூக நலனுக்காக இந்தப் பணிகளை மேற்கொள்வதாகவும், அந்த நிலத்தை தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் கடன் மூலம் வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது வங்கிக் கணக்குகள், வரி அறிக்கைகள் மற்றும் மத்திய அரசின் ‘PMEGP’ திட்டத்தின் கீழ் பால் பண்ணைக்கான விண்ணப்பம் ஆகியவை தனது நேர்மையை நிரூபிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விளக்கங்கள் நெட்டிசன்களையும், அரசியல் விமர்சகர்களையும் முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை.
புதிய வணிக முயற்சி – அரசியல் லாபமா?
“நான் அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனுக்காகவும், நான் செய்து வரும் பணிகள்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். ஆனால், “நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து, உதவுவதன் மூலமாகவும்… விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்,” என்று அவர் கூறியிருப்பது, ஒரு அரசியல் தலைவர் வணிக முயற்சிகளில் ஈடுபடுவது குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
தமிழகத்தில் ஒரு காலத்தில் ஆளுமை செலுத்திய சில பாஜக முன்னாள் தலைவர்கள், இப்போது அரசியல் களத்திலிருந்து விலகி, புதிய தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அண்ணாமலை, பால் தொழில் செய்யப் போவதாக அறிவித்து, இப்போது பல கோடி நிலம் வாங்கியிருப்பது, அவர் ஒரு வழக்கமான சொத்து குவிப்பு ஆசாமியா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
நம் ஆந்தை ரிப்போர்ட்டர் இணையம் வெளியிட்ட ஒரு சிறப்பு கட்டுரையில், அண்ணாமலையின் சொத்து விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததைக் குறிப்பிட்டு, அவரது சொத்து மதிப்பு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தபோது ரூ. 2-3 கோடியில் இருந்து 2024 பொதுத் தேர்தலில் ரூ. 8-10 கோடியாக அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டோம். இது, அரசியல் செல்வாக்கின் மூலம் சொத்துக்கள் அதிகரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
இப்போது அண்ணாமலை, தனது கடிதத்தில், “சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்,” என்று கூறியிருப்பது, அவர் தனது விமர்சகர்களைப் புறக்கணிப்பதாகவும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் காட்டுகிறது.
ஆனால், ஒரு அரசியல் தலைவரின் நேர்மை, அவரது பேச்சில் மட்டுமல்ல, செயல்களிலும் வெளிப்பட வேண்டும். தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள நிலம் வாங்கிய விவகாரம், அண்ணாமலையின் பிம்பத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ‘நேர்மையானவன்’ என்ற அவரது அரசியல் முகம், இப்போது ‘சொத்து குவிப்பவன்’ என்ற பிம்பத்தை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி வலுத்து வருகிறது. இந்த விவகாரம், தமிழக அரசியலில் மேலும் பல விவாதங்களையும், விமர்சனங்களையும் நிச்சயம் உருவாக்கும்.
நிலவளம் ரெங்கராஜன்


