பார்லிமெண்ட் & அசெம்பளிக்கு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக & திமுக எதிர்ப்பு

பார்லிமெண்ட் & அசெம்பளிக்கு ஒரே தேர்தல் முறைக்கு  அதிமுக & திமுக எதிர்ப்பு

பாஜக அதீத அக்கற்றைக் காட்டும் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து   முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட அமைச்சகத்திற்கு முன்பே கடிதம் எழுதியுள்ள நிலையில்  திமுக, நாளை நடைபெறவுள்ள சட்ட ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கருத்தை பதிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற பெயரில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்காக செலவிடப்படும் பல கோடி பணம் சேமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தலைமை தேர்தல் ஆணையர் ராவத், சட்டத்திருத்தம் செய்யாமல் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறினார். இந்நிலையில் இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த சட்ட ஆணையம் தற்போது இதுகுறித்து நாட்டின் பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்தது. அதற்கான கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பாக திருச்சி சிவா கலந்துகொள்வார் என்றும், அப்போது இந்த புதிய முறையை திமுக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை எனும் எதிர்ப்பை அவர் பதிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பாக துணை சபாநாயகர் தம்பிதுரையும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைந்த பின் தம்பிதுரை பேட்டி அளித்தார். அப்போது அவர் ”மக்களவை தேர்தலுடன் தமிழக பேரவைக்கு தேர்தல் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளோம். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் அறிய வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

 
நாடாளுமன்றத்திற்கு தனியாகவும், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தனியாகவும் தேர்தல் நடத்தலாம்.  மத்திய அரசுக்கு, நாங்கள் உறுதுணையாக இல்லை.
 
2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம், 2024-ல் வேண்டுமானால் நடத்தலாம். ஆட்சியை கலைத்து தேர்தல் கொண்டுவரக் கூடாது. என கூறினார். 

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட அமைச்சகத்திற்கு முன்பே கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!