நீட் நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!

நீட்  நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!

ஒரு வழியாக கட்டாயமாகி விட்ட நீட் நுழைவுத் தேர்வு இனிமேல் சிபிஎஸ்இ-க்கு பதிலாக, தேசிய தேர்வு முகமை மூலம், வருடத்திற்கு 2 கட்டங்களாக நடத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, தேசிய தகுதி தேர்வான நெட் மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் இனிமேல் தேசிய தேர்வு முகமை மூலமே நடத்தப்படும் என்றார்.

அனைத்து நுழைவுத் தேர்வுகளும் கணினி மூலமே நடத்தப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றார்.

அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வருடத்திற்கு 2 மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கூறிய அவர், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மாணவர்கள் 2 கட்டத் தேர்வுகளிலும் பங்கேற்கலாம் என்றும், அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே மாணவர்களின் மதிப்பெண்களாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

நீட் முதல் கட்டத்தேர்வு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் 4 நாட்கள் நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே மாதம் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிக்குள் ஏதேனும் 4 நாட்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், எந்த தேதியில் தேர்வு எழுதுவது என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இதனிடையே நீட் நுழைவுத்தேர்வை பல அமர்வாக நடத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும், நீட் நுழைவுத்தேர்வு கட்டணத்தையும் குறைக்கவேண்டும் என்று டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!