அரிசி, தயிர், கோதுமைக்கான ஜிஎஸ்டி வரி ரத்து!

அரிசி, தயிர், கோதுமைக்கான ஜிஎஸ்டி வரி ரத்து!

சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரிசி, பருப்பு, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும், திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது.

இதனால் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நடுத்தர, ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், உணவு தானியங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் எனவும் பட்டியலிட்டுள்ளார்.  அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!