உலக அமைதி நாள்: மன அமைதி முதல் உலக அமைதி வரை!

அமைதியை உலகம் முழுவதும் பரவச்செய்து, போர் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக 1981ம் ஆண்டு ஐ.நா.பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட உலக அமைதி நாளானது 1982ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், மூன்றாவது செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 லிருந்து ஆண்டுதோறும் இவ்வுலக நாள் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.. சாதாரண மனிதனாக இருந்தாலும், சகல செல்வங்களுக்கும் அதிபதியாக இருந்தாலும் எல்லாரும் விரும்புவது மன அமைதியை மட்டுமே. மன அமைதி நிலவ நம்முடைய சுற்றுச்சூழல் அமைதியாக இருக்க வேண்டும். ஆத்திரம் ஊட்டும் செயல்கள் பல நம்மை சூழ்ந்து கொண்டாலும், அநியாயங்களால் நாம் தாக்கப்பட்டாலும், அதர்மம் நம்மேல் ஆதிக்கம் செலுத்தினாலும் எதிலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சினம் காட்டாமல் அமைதி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் அனுபவம் வாய்ந்த ஆன்றோர் பலர். ஆக நம்மிலும் நம்மைச் சுற்றிலும் அமைதியை நாம் அனுபவிக்க வேண்டும். அமைதியான முறையில் இவ்வுலக மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் அனைத்துலக அமைதி நாளானது
உலகெங்கும் அமைதியை உருவாக்குவது பற்றி பேச்சு நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அமைதியை யாரும் உருவாக்க முடியாது. மோதல்கள்தான் மனிதர்களின் உருவாக்கம். மோதல்களை உருவாக்காமல்விட்டாலே, அமைதி தானாக நிகழும்!உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன. தனிமனிதன் தனக்குள்ளேயே சில மோதல்களை உணர்கிறான். அது வெளியிலும் நீள்கிறது. குடும்பத்தோடு, பக்கத்து வீட்டோடு நிகழும் மோதல்களே சமூகங்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் மதங்களுக்கு நடுவிலும்கூட நிகழ்கின்றன.இந்த உலகுக்கு மோதல்கள் புதிதல்ல. மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு மோதல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சண்டைகளை அவ்வப்போது சரிசெய்யத்தான் பார்த்திருக்கிறார்களே தவிர, நிரந்தரமான தீர்வுக்கு யாரும் முயற்சித்ததில்லை. சண்டை வருகிறபோது சமாதானம் ஏற்படுத்துகிறார்கள். சிறிதுகாலத்துக்குப் பிறகு அது மீண்டும் வெடிக்கிறது. அமைதியின் உறைவிடங்களாய் கருதப்படும் மதங்களின் பேரிலேயே அதிக அளவு மோதல்கள் உலகெங்கும் ஏற்படுகின்றன.
எனவே, அவ்வப்போது சண்டைகளைச் சரிசெய்வது பற்றி மட்டும் சிந்திக்காமல் நிரந்தரமான தீர்வை நோக்கி நகர வேண்டும். அமைதியை ஒரு கலாசாரமாக உருவாக்க வேண்டும் என்று கருதினால், முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரே இரவில் கலாசாரத்தை உருவாக்கிவிட முடியாது. தீர்மானம் இயற்றுவதாலோ, சட்டம் நிறைவேற்றுவதாலோ கலாசாரங்கள் உருவாவதில்லை. ஒரு முழுத் தலைமுறை அமைதியில் வாழுமேயானால் அடுத்த தலைமுறையில் அந்த அமைதியே ஒரு கலாசாரமாக மலர வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒரு சிக்கலுக்கு உடனடித் தீர்வு எது என்று எதையோ செய்ய யோசிப்பதைவிட நிரந்தரத் தீர்வு என்ன என்று சிந்திப்பதே நல்லது.
மனிதர்களைப் பொறுத்தவரை எது நிகழ்ந்தாலும் அது ஒருவருக்கு ஆதாயம் தருவதாகவும், இன்னொருவருக்கு நஷ்டம் தருவதாகவும்தான் அமையும். காலங்காலமாகவே உலகெங்கும் இந்தக் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. குடும்பங்கள் மத்தியில் என்றாலும், தேசங்களுக்கு மத்தியில் என்றாலும், நஷ்டம் ஏற்படுகிறபோது கோபமும் பதட்டமும் ஏற்படுமேயானால், அங்கே அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை. எல்லா மனிதர்களுக்குமே வாழ்வின் சில தருணங்களில், சில பாதகங்களும் அநீதிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அப்போதெல்லாம் மனிதர்கள் பதட்டமடைகிறபோது மோதல்கள் எழுவது இயற்கை!அமைதியான மனிதர்கள் உருவாகும்வரை அமைதியான உலகம் என்பது நிறைவேறாத கனவாகத்தான் இருக்கும். இன்று அமைதி குறித்துப் பேசுகிற உலக நாடுகள்கூட தங்களுக்குச் சூழ்நிலை பாதகமாக இருந்தால், அமைதி குறித்துப் பேசுவார்கள். சூழ்நிலை சாதகமாக இருந்தால் போர் குறித்துப் பேசுவார்கள்!
அதே சமயம் போர்களைவிடவும் மக்களை அதிகம் கொல்லும் ஆபத்தாக தற்போது இயற்கை சீற்றங்களும், காலநிலை மாற்றங்களும் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு வரலாறு காணாத சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்ததன் காரணமாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதுபோலவே துருக்கி, கனடா, இத்தாலி, வட அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த ஆண்டு காட்டுத்தீ கோரதாண்டவம் ஆடியது. மேலும் ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் ஏற்பட்ட பெருவெள்ளமும் மக்களின் அமைதியை சூரையாடியது. சீனா, பாகிஸ்தான், இந்தியாவின் சில பகுதிகளிலும் கடும் வெள்ளபாதிப்புகள் மக்களின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்துக் கொண்டிருக்கிறது.இப்படி உலகமெங்கும் போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் “ உலக அமைதி” என்பதுதான் ஒவ்வொரு மனிதருக்கான உன்னத தேவையாகிறது என்பதே உண்மை.
இதனிடையே உலக அமைதி பற்றி பேசுபவர்கள் ஒரு விநாடிகூட தங்களுக்குள் அமைதியாக இருக்க முடிவதில்லை என்றால், அது மிகப் பெரிய வேடிக்கையாகத்தான் இருக்க முடியும். ‘நம்மைச் சுற்றி அநீதியும் அநியாயங்களும் நடைபெறுகிறபோது, அமைதியாய் இருப்பது எப்படி?’ என்று சிலர் கேட்பார்கள். உங்களைச் சுற்றி அநியாயங்கள் நடைபெறுகிறபோதுதான் இன்னும் அமைதியாய் இருக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பதட்டமான சூழலில் அமைதி இழப்பது சூழ்நிலையை மேலும் சீர்குலைக்குமே தவிர, சரிசெய்யாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
நிலவளம் ரெங்கராஜன்