நம்ம சென்னையிலிருந்து ஒரு வாட்ஸ் அப் சேவை – விஸ்லி (Whistly)!

நம்ம சென்னையிலிருந்து ஒரு வாட்ஸ் அப் சேவை – விஸ்லி (Whistly)!

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் இருப்பிடம் சார்ந்த சமூக செயலி’ – இது விஸ்லியின் அறிமுகம்.

இதில், இருப்பிடம் சார் (location-based ) மற்றும் சமூக செயலி இரண்டுமே முக்கியமான அம்சங்கள், ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் இணைந்த சேவையாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை சென்னையில் இருந்து உருவாகி இருக்கும் வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம். அல்லது சென்னை போன்ற நகரங்களுக்கான வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம்.

வாட்ஸ் அப் போல, விஸ்லியும் ஒரு மேசேஜிங் சேவை தான். ஆனால், வாட்ஸ் அப் போல பொதுவான மெசேஜிங் வசதியாக அல்லாமல், இருப்பிடம் சார்ந்த நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சேவை.

விஸ்லி மூலம், ஒருவர் தனது அருகாமையில் இருப்பவருடன் மேசிஜிங் மூலம் உரையாடலாம்.

உதாரணத்திற்கு, சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் ஒருவர் அண்ணாசாலையில் இருந்தபடி, அருகாமையில் இருக்கும் சக பயனாளியிடம் செய்திகளை பரிமாறி தேவையான தகவல்களை பெறலாம்.

அல்லது சத்யம் திரையரங்கிற்கு செல்பவர், தான் பார்க்க உத்தேசித்துள்ள திரைப்படம் பற்றி அருகாமையில் உள்ள திரைப்பட ரசிகருடன் உரையாடலாம்.

இன்னும் எண்ணற்ற விதங்களில் இந்த செயலியை பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு இந்த செயலி, குறிப்பிடத்தக்க பயனாளிகளை முதலில் பெற வேண்டும். இப்போது தான் அறிமுகம் ஆகியிருக்கும் செயலி என்பதால் இப்போதைக்கு திறந்த புத்தகம் அல்லது வெற்றுப்பலகை போல செயலி உள்ளது. இனி தான் பயனாளிகள் வந்து குவிய வேண்டும்.

ஆனால், நல்ல செயலி என்றால் முதலில் ஆதரிக்கும் ஆரம்ப பயனாளியாக இருக்கலாம் அல்லவா! எனவே மற்றவர்களை எதிர்பார்க்காமல் நாம் இணையலாம்.

அதற்கு ஏற்ற வகையில் செயலி எப்படி இயங்குகிறது என பார்த்து விடலாம்.

தளத்தில் நுழைந்தவுடன், விசில் செய்யத்துவங்குங்குகள் என்கிறது. அதை ஏற்று உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, முதல் செய்தியை வெளியிட்டால், அதைப்பார்த்து அருகாமை நண்பர்கள் பதில் அளிக்கலாம்.

இடைமுக அனுபவத்தை பொருத்தவரை குறும்பதிவு சேவையான டிவிட்டரை நினைவுபடுத்துகிறது. எனவே சென்னை போன்ற நகரங்களுக்கான டிவிட்டர் என்றும் அழைக்கலாம்.

இருப்பிடம் சார்ந்த செயலி என்றாலும், பயனாளிகளிடம் இருந்து குறைந்த பட்ச தகவல்களே சேகரிப்படுகிறது, பயனாளிகள் தகவல்கள் மூன்றாம் தரப்பிடம் விற்கப்படாது எனும் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இது பிரைவஸி கவலையை போக்கும் அம்சம் என கருதலாம்.

இந்த செயலியின் தோற்றம் பின்னே ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. பிராடக்ட் ஹண்ட் ( https://www.producthunt.com/posts/whistly) தளத்தில் அறிமுகமான இந்த செயலியை பற்றி மேற்கொண்டு அறிய முயற்சித்த போது, இதன் உருவாக்குனர் (https://twitter.com/vsnthv ) என அறிய முடிந்தது. இந்த டிவிட்டர் பக்கத்திற்கு சென்றால், அதன் பின்னே இருக்கும் வசந்த்.வி ( https://vasanthv.com/) நம்மவராக இருக்கிறார். ( அதனால் தான் இதை சென்னையில் இருந்து உருவான வாட்ஸ் அப் என அழைக்கலாம்)

ஆம், வசந்த சென்னையைச் சேர்ந்த மென்பொருளாளர். இங்கிருந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றுக்கு பணியாற்றுபவர், செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவர் என தனது இணையபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே , sonbox, Talk, Notedown & Looptap. ஆகிய செயலிகளை உருவாக்கியவர் இப்போது Whistly, உருவாக்கியுள்ளார்.

இத்தகைய ஒரு இருப்பிடம் சார் செயலியை உருவாக்குவது நீண்ட நாள் விருப்பம், இரண்டு ஆண்டு முயற்சிக்கு பிறகு இதை உருவாக்கியுள்ளதாக ’பிராடக்ட் ஹண்ட்’ அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிராடக்ட் ஹண்ட் தளத்தில் அறிமுகமாகும் பல செயலிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெறுவது உண்டு. விஸ்லிக்கும் அவ்வாறு நிகழட்டும் என வாழ்த்தலாம்.

சைபர்சிம்மன்

Related Posts

error: Content is protected !!