பெண்களை இழிவுபடுத்தும் மனநிலை எப்போது ஒழியும்?

பெண்களை இழிவுபடுத்தும் மனநிலை எப்போது ஒழியும்?

ண்மையில் கோடம்பாக்கத்தில் தன்னுடைய உடல் எடை குறித்து யூடியூபர் கேட்ட கேள்விக்கு, நடிகை கெளரி கிஷன் அளித்த பதிலைப் பார்த்தேன். ’அதர்ஸ்’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பின்போது படத்தின் ஹீரோவிடம் யூடியூபர் ஒருவர் கெளரியின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இதற்கு பதிலளித்த கெளரி, உடல் எடை குறித்து கேட்பது பாடி ஷேமிங் என்று கண்டனம் தெரிவித்தார். அமைதியான உடல் மொழியில் குரலை உயர்த்தாமல், கேள்வி கேட்ட கெளரியின் செயல்களை, கேள்வி கேட்ட நபரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை போல. தொடர்ந்து உரத்த குரலில் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார். கெளரி பேசும்போது தொடர்ந்து குறுக்கிட்டவாறேயும் இருந்தார்.

எடை குறித்த கேள்வியை கேட்காமல் மோடி குறித்தும், டிரம்ப் பற்றியுமா கேட்க முடியும் என்ற நிருபரின் கிண்டல், ஆணவத்தாலா அல்லது நடிகைகள்தானே என்ற இளக்காரத்தாலா என்று தெரியவில்லை.

கௌரி கிஷனை அந்த நிருபர் பேசவிடாமல் தடுத்த சூழ்நிலையில், அவருக்கு ஆதரவாக யாருமே பேசவில்லை. அங்கு வந்திருந்த சினிமா பத்திரிகையாளர்களும் இதைக் கண்டிக்க முற்படவில்லை. ஏன், படத்தின் இயக்குநரும் ஹீரோவும் இயக்குநரும் அருகிலேயே அமர்ந்திருந்தபோதும் கெளரிக்கு ஆதரவாக எதுவும் பேச முன்வரவில்லை. (ஆனால் வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த என்னால் அமைதியாக பொறுக்க முடியவில்லை. தவறு செய்கிறார். ஏன் இவ்வளவு அமைதி காக்கிறார்கள் என்று கோபம் கூட வந்தது. )

கத்தி, கோபப்பட்டு, கண்ணீர் விட்,டு எழுந்து சென்று.. என எதையும் செய்யாமல், அமைதியான முறையில், அழுத்தமான வார்த்தைகளைக் கோத்து பதிலடி கொடுத்தார் கெளரி.

அவர் சொன்னது அவரின் வார்த்தைகளிலேயே…!

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். You are not doing a favour!

இது செக்சிசம்!

ஒரு ஹீரோவிடம் என் உடலை பற்றி கேட்பது தவறுதான்!

என் கேரக்ட்ர் பற்றி கேளுங்க. ஒரு கேள்வி கூட அதைப்பற்றி இல்லையே? என்னோட எடை பற்றி கேட்பீங்க , பின் என்னவெல்லாம் கேட்பீங்கன்னு தெரியும்!
உங்களுக்கு எங்களின் ஹார்மோன் இஷ்யூஸ் பத்தி தெரியுமா?

என்ன அர்த்ததில் கேட்டீங்கன்னு தெரியும், எனக்கு தமிழ் தெரியும், இங்க படிச்சவதாம்!

ஒருத்தர் கூட எனக்கு ஆதரவா பேசல. இருந்தாலும் நான் பேசறேன், நான் பேசுவதை இடைமறிக்காம கேளுங்க!நீங்க பேசினத நான் கேட்டுக்கிட்டேன். இப்போ பதிலை குறுக்க பேசாம கேளுங்க!

நீங்க செய்யறது எல்லாம் ஜர்னலிசம் இல்லை!

என்ன வச்சு கத்தறீங்க? Every women has different body type! அதுக்குன்னு ஜீரோ சைஸ்ல இருக்கனுமா?

நீங்க பாடி ஷேமிங் செய்தது தப்புதான்!

மன்னிப்பு கேட்க முடியாது! நீங்கதான் கேட்கனும்,

நான் குண்டா இருப்பேன், 80 கிலோ இருப்பேன். என் நடிப்பை பத்தி பேசுங்க!

Normalizing body shaming ஏன் ஆக்டரஸ் க்கு எப்பவும் நடக்குது .

இதெல்லாம் காமெடி இல்லை!

என் நடிப்பை, கேரக்டர் பற்றி பேசினீங்களா?

ஜீரோ கேள்விகள் என் படம் பற்றி..ஆனா எப்படி தூக்கினிங்கன்னு செக்சுவலைஸ் செய்யறீங்க? அடுத்து என்ன கேப்பீங்கம்னு தெரியும்! -என்று கெளரி அழகான பதிலடி தந்தார்.

தனித்து இயங்கும் பெண்களை, குறிப்பாக சினிமா, மாடலிங் துறையில் இருக்கும் பெண்களைத் தரக்குறைவாக நினைக்கும், பார்க்கும், பேசும் இழிநிலை என்று மாறும்? அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய பெண் நெறியாளரின் ஸ்லீவ்லெஸ் ரவிக்கை குறித்து, செய்தியாளர் ஒருவர் அநாவசியமாகக் கேள்வி எழுப்பி இருந்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

அண்மையில் கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண், அரை நிர்வாணமாக இருந்தாரா, முழு நிர்வாணமாக இருந்தாரா என்று நிருபர் ஒருவர் அநாகரிகமாக கேள்வி எழுப்பி இருந்தார். இவர்கள் உண்மையிலேயே பத்திரிகையாளர்கள்தானா என்று கேள்வி எழுகிறது.ஹீரோக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் குறிப்பாக, அதிகாரத்தில் உள்ள ஆண் அரசியலர்களிடமும் இவர்களால் இத்தகைய கேள்விகளை எழுப்ப முடியுமா?

கடும் கண்டனங்கள்!

ரமணி பிரபாதேவி

Related Posts

error: Content is protected !!