போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லம் எங்களுக்குத்தான் சொந்தம் – ஜெ. தீபா ஆவேசம்!

போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லம் எங்களுக்குத்தான் சொந்தம் – ஜெ. தீபா ஆவேசம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் வசித்த வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ., வசித்த ‘வேதா இல்லம்’ உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு ஜெ., வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ., இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.ஜெ., வீட்டை அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் ஜெ.தீபா கூறியதாவது: எங்கள் அத்தை ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேதா இல்லத்தை கோயிலாக நினைக்கலாம், ஆனால் கோயிலாக மாற்ற முடியாது. ஜெ.,வின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இது எங்களுடைய பூர்வீக சொத்து.

என்னையும், என் சகோதரன் தீபக்கையும் ஜெ. சொத்துக்கு வாரிசு நாங்கள் தான் என நீதிமன்றமே அங்கீகரித்துள்ளது.எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடந்துள்ளன. எங்களுக்கு பணம் தேவையில்லை. தமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது. வேதா இல்லத்தில் உள்ள பொருட்கள் விவரம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

நிலத்தை கையகப்படுத்த மட்டுமே அரசால் முடியும்; பொருட்களை எடுக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா? அல்லது வழக்கு தொடர்ந்தோமா?. ஜெயலலிதா மரணம் எதிர்பாராதது, இல்லையெனில் உயில் எழுதி வைத்திருப்பார்.ஜெ.,வின் போயஸ் இல்லம் விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும்.

அதற்கு அதிமுக தொண்டர்கள் துணை நிற்க வேண்டும். எங்கள் தரப்பு நியாயங்களை அரசு கருத்தில் கொள்ளவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகம் ஆக்குவதில் மக்களுக்கு என்ன பயன்?. ஜெ., மறைந்த உடன் அறக்கட்டளை அமைத்து ஏழைகளுக்கு உதவினார்களா?

ஓட்டு வங்கிக்கு மட்டும் ஜெயலலிதா பெயரை பயன்படுத்துகிறார்கள்.ஜெ., ஆசை:வேதா இல்லத்தில் கல்வி நிலையம் தொடங்க ஜெ., ஆசைப்பட்டார். நலத்திட்டத்திற்காக வீட்டை கேட்டிருந்தால் நாங்களே மனமுவந்து அளித்திருப்போம். 6 மாதத்தில் தேர்தல் வருவதால் அதை நோக்கமாக கொண்டு ஓட்டு அரசியலுக்காக இப்படி அறிவித்துள்ளனர். கட்சியை பிரித்துக்கொண்டு இருந்தபோது இது கோயிலாக தெரியவில்லையா. தேர்தல் வரும்போது தான் இதுபற்றி யோசிக்கின்றனர். என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!