திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை டெண்டர் மூலமாக மத்திய அரசு 50 வருட குத்தகைக்கு அதானி குழுமத்திற்கு வழங்கி உள்ளது. 30 ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள விமான நிலையத்தை தனியாருக்கு வழங்கியதற்கு கேரள அரசும் காங்கிரஸ் உட்பட எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததை மோடி அரசு கண்டு கொள்ளாத நிலையில் இந்த விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களை குறிப்பிட்ட கால அளவில் தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட புதன்கிழமை மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் முதல்வர் பினராய் விஜயன் மத்திய அரசின் முடிவு ஒருதலைப்பட்சமானது எனவும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும் வலியுறுத்தி இருந்தார்.

மேலும் மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு ஒத்துழைக்காது எனவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மாநில அரசின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டது.

இதுகுறித்து பின் விளக்கமளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹா்தீப் சிங் புரி, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தை குத்தகைக்கு விடும் ஏலத்தில் கேரள அரசு தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மாநில முதல்வர் பினராய் விஜயன் அதானி குழுமம் வழங்கும் தொகையை மாநில அரசு வழங்க முன்வந்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முதல்வர் பினராய் விஜயன் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அறிவித்தார். அரசின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!