உங்க வியாபாரம் 20 லட்சத்துக்கும் குறைவா? அப்ப ஜி எஸ் டி வரி கிடையாது!~

உங்க வியாபாரம் 20 லட்சத்துக்கும் குறைவா? அப்ப ஜி எஸ் டி வரி கிடையாது!~

ஜிஎஸ்டி வரி விகிதங்களை தீர்மானிப்பது, அது தொடர்பான முழுமையான சட்டவிதிகளை இறுதி செய்வது குறித்து முடிவெடுப்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கடந்த இருநாள்களாக நடைபெற்ற இக்கூட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஜிஎஸ்டி நிர்வாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது, ஜிஎஸ்டி வரி விகிதத்தை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து அக்டோபர் மாதம் 17 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். முன்னதாக, செப்டம்பர் 30-ஆம் தேதியும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வரிவிலக்கு தொடர்பான சட்டங்கள் இறுதி செய்யப்படும்.

GST SEP 24

வரி வருவாய்ப் பகிர்வை இறுதி செய்ய 2015-16-ஆம் நிதியாண்டு அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு கணக்கிடப்படும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசுகளுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடுசெய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இனி வரும் கூட்டங்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

குறிப்பிட்ட கால இடைவேளையில் இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கும். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆலோசனை தொடர்ந்து நடைபெறும்.இப்போது விதிக்கப்பட்டு வரும் அனைத்து கூடுதல் வரிகளும் ஜிஎஸ்டியுடன் இணைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டும் தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு உரிமை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். ரூ.1.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தொழில், வர்த்த நிறுவனங்களின் ஜிஎஸ்டியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிர்வகிக்கும்.
ரூ.20 லட்சம், அதற்குக் குறைவாக வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பகுதி மாநிலங்களில் இந்த வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக இருக்கும்” என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்ற முடிவுக்கு அகில் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. “இதன் மூலம் கோடிக்கணக்கான சிறு வணிகர்கள் பயனடைவார்கள், அரசுக்கும் நிர்வாகச் செலவு பெருமளவில் குறையும்’ என்று அந்தக் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பி.சி.பாரதியா தெரிவித்துள்ளார்.

முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குஜராத், கேரளம் சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில நிதியமைச்சர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். “நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் நலன் காக்கப்பட்டுள்ளது’ என்று மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!