மதுரை தினகரன் ஆபீஸ் எரிக்கப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை!!

மதுரை தினகரன் ஆபீஸ் எரிக்கப்பட்ட வழக்கு: 9  பேருக்கு ஆயுள் தண்டனை!!

இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய  மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்ட  வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மறைந்த முதல்வர் கருணாநிதி அரசியல் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு மாறன் பிரதர்ஸின் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதில் தற்போதைய திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு அதிக பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும், முன்னாள் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சரும், கலைஞரின் மகனுமான அழகிரிக்கு மிகக் குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டது.

இந்த கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து, அழகிரி ஆதரவாளர்கள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2007 மே 9 ஆம் தேதி மதுரையில் உள்ள சன் குழுமத்துக்கு சொந்தமான தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது அலுவலகத்தில் கணினி லே-அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் தீவைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட அனைவரையும் மதுரை மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரியும் சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2011ல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 8ஆண்டு காலமாக நிலுவையிலிருந்த நிலையில் இன்று (மார்ச் 21) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுவித்து உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!