டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல்!

டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல்!

டெல்லியில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் விரும்பாததால், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
delhi
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதை தொடர்ந்து அங்கு சட்டசபை முடக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 17–ந்தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் ஆட்சியமைப்பது தொடர்பாக நவம்பர் 11–ந்தேதிக்கு முன் முடிவு எடுக்குமாறு மாநில துணைநிலை கவர்னருக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் டெல்லி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் ஆட்சியமைக்க எந்த கட்சியும் விரும்பாததால், மாநிலத்தில் அரசு அமைப்பது தொடர்பாக விவாதிக்க பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளுக்கு துணைநிலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.அதன்படி நேற்று காலையில் பா.ஜனதாவின் மாநில தலைவர் சதீஷ் உபத்யாய் மற்றும் மூத்த தலைவர் ஜெக்திஷ் முகி ஆகியோர் துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்தனர். அப்போது, டெல்லியில் சட்டசபையை கலைத்து விட்டு புதிய தேர்தல் நடத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘டெல்லியில் புதிய தேர்தலை சந்திக்கவே நாங்கள் விரும்புகிறோம். இங்கு தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது’ என்று கூறினார்.இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஹரூன் யூசுப் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் துணைநிலை கவர்னரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து பின்னர் ஹரூன் யூசுப் கூறுகையில், டெல்லி சட்டசபையை உடனடியாக கலைத்து விட்டு, காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுடன் சேர்த்து டெல்லியிலும் தேர்தல் நடத்த வேண்டும். எங்களின் இந்த விருப்பத்தை துணைநிலை கவர்னரிடம் தெரிவித்து விட்டோம் என்றார்.

இதைப்போல ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவுடன் இணைந்து துணைநிலை கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தில் புதிதாக தேர்தல் நடத்துமாறு அவர்களும் கோரிக்கை விடுத்தனர்.இவ்வாறு எந்த கட்சியும் டெல்லியில் ஆட்சியமைக்க விரும்பாததால், மாநில நிலவரம் குறித்த அறிக்கையை விரைவில் ஜனாதிபதிக்கு, துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அனுப்பி வைப்பார் என ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி துணைநிலை கவர்னர் தனது அறிக்கையை எந்த நேரத்திலும் அனுப்பி வைக்கலாம் என கூறப்படுகிறது.
டெல்லியில் ஆட்சியமைக்க எந்த கட்சியும் விரும்பாததால், அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

error: Content is protected !!