இந்திய முப்படை பாசறைக்கு திரும்பியது! – வீடியோ!

இந்திய முப்படை பாசறைக்கு திரும்பியது! – வீடியோ!

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட முப்படை வீரர்கள் தங்களது பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி  கடந்த 1950 முதல் கொண்டாடப்படுகிறது. ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய ராபர்ட் இந்த நிகழ்ச்சியை பேண்ட் வாத்தியக் கருவிகளின் முழக்கத்துடன் தனித்துவம் மிக்கதாக உருவாக்கினார். ஆண்டு தோறும் நடக்கும் இக் கோலாகல நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முப்படை தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவன்று முப்படை வீரர்களும் அணிவகுத்து சென்றனர், இது அந்த முப்படைகளும் போருக்கு செல்வதாக கருதப்படும். இந்த படைகள் மீண்டும் திரும்பி வருவதே பாசறை திரும்புதல் நிகழ்வாகும். குடியரசு தினம் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் படைகள் அனைத்தும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது.  இதற்கான விழா டில்லி விஜய் சவுக் பகுதியில் இன்று நடைபெற்றது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் விஜய் சவுக் பகுதிக்கு வருகைத் தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றிவைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். பின்னர் தனக்கென அமைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

முப்படை வீரர்கள் இசைக்குழுவுடன் பிரம்மாண்டமாக அணிவகுக்க ஆயிரக்கணக்கான பார்வை யாளர்கள் அதனைக் கண்டுகளித்தனர். 25 பாடல்கள் இசைக்கப்பட்டன. துணை குடியரசு வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் குடியரசு தலைவர் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்படும் முன்னர் ராஷ்டிரபதி பவன், பாராளுமன்றம், ராஜ பாதையில் உள்ள உள்துறை அமைச்சகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் மின்விளக்கு ஒளியால் அலங்கரிக்கப்பட்டன.

error: Content is protected !!