வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை!’- (மீண்டும்) சென்னை போலீஸ் அறிவிப்பு

வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை!’- (மீண்டும்) சென்னை போலீஸ் அறிவிப்பு

சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களைப் பற்றிய விவரங்களை அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என்றும வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 60 நாட்களுக்குள் அதாவது ஜனவரி 31ம் தேதிக்குள் வீட்டு உரிமையாளர்கள் இதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் தேரிவித்துள்ளார்.
nov 28 police cap_
கடந்த ஆண்டு அடுத்தடுத்து வங்கிக் கொள்ளைகள் மற்றும் வேளச்சேரி என்கவுன்டர் போன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களையும் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவத்துடன், குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்று மாநகர காவல்துறை புதிய ஆணை ஒன்றை பிறப்பித்திருந்தது. இந்த ஆணையால் அதிருப்தியுற்றவர்களின் சிலரது சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குடியிருப்போர் பற்றிய தகவல்கள் தராவிட்டால் வீட்டு உரிமையாளர்கள் மேல் வழக்கு தொடரப்படும் என போலீஸ் தரப்பு கூறியுள்ளது என்றும், குடியிருப்போர் பற்றிய தகவல் கேட்பதற்கு போலீஸுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்பதால், அந்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல்துறையின் ஆணைக்கு கடந்த ஆண்டு மார்ச மாதம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் தற்போது சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் குறித்து, டிச.1 முதல் 60 நாட்களுக்குள் அந்தந்த காவல் நிலையத்தில் விபரம் தெரிவிக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து,”இந்த திட்டம் மிகவும் எளிதானது. இதில் எந்தவித பயமும் தேவை இல்லை. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் போலீஸ் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.

இந்த விவரங்கள் போலீஸ் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்ப மனுக்கள் போலீஸ் நிலையங்களில் கிடைக்கும். http://www.tnpolice.gov.in/என்ற இணையதள முகவரியில் இருந்தும், விண்ணப்ப பாரங்களை எடுத்து கொள்ளலாம். வருகிற டிசம்பர் 1–ந்தேதியில் இருந்து, இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அமலுக்கு வந்த 60 நாட்களுக்குள் வாடகை தாரர்கள் பற்றிய தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இதற்கு வீட்டு உரிமையாளர்களே முழு பொறுப்பாளி ஆவார்கள். வாடகை தாரர்கள் பற்றி தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மையானதா? என்பதை போலீசார் தனியாக ரகசியமாக விசாரித்து தெரிந்து கொள்வார்கள்.

டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இந்த திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. சென்னையில் தாமதமாகத்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். ” என்று தெரிவிக்கின்றனர்

Related Posts

error: Content is protected !!