மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்கக் கூடாது! – தேர்தல் அதிகாரி தகவல்

மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்கக் கூடாது! – தேர்தல் அதிகாரி தகவல்

ஜுன் முதல் வாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட இருந்தது. ஆனால் இடைத் தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதி, சென்னை மாவட்டம் என்பதால், இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகே மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை தமிழக அரசு தொடங்க முடியும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
metri may 28
இதுகுறித்து நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டியின் போது,”டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் இடைத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அங்கு திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரலுக்கு முந்தைய நிலவரப்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும், இடைத் தேர்தல் நடக்கும் தொகுதி இருக்கும் மாவட்டம் முழுவதுமே அமலாகும்.

ஆனால் அதில் திருத்தம் செய்யப்பட்டு, 26.4.12 தேதிக்கு பின்னர் நிலை மாறிவிட்டது. அதன்படி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களை அமல்படுத்துவது, இயற்கை பேரிடர், வறட்சி, வெள்ளம் ஆகியவை தொடர்பான நிவாரணம் வழங்குவது; குடிநீர், ஆழ்துளை கிணறு தோண்டுவது, கால்நடை தீவனம், வேளாண்மை குறித்த திட்டங்கள்; விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்; எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்; புதிய திட்டங்களை அறிவித்து தொடங்குவது; சலுகைகள், நிதி உதவிகள் அளிப்பது; பிற சொத்துகள் மீது தேர்தல் விளம்பரம் செய்தல்; அரசு சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துதல் ஆகியவை தொடர்பான தேர்தல் நடத்தை விதிகள், இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரைகள் அனைத்தும், இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிக்குத்தான் பொருந்துமே தவிர, அந்தத் தொகுதி அமைந்துள்ள ஒட்டுமொத்த மாவட்டத்துக்கும் பொருந்தாது.

அதன்படி பார்த்தால், ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் இந்தத் திட்டங்களை அமல்படுத்த முடியாது. தனிநபரைச் சென்றடையும் மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டங்களையும் ஆர்.கே.நகர் தொகுதியில் செயல்படுத்த முடியாது. ஆனால் இந்தத் திட்டங்களை சென்னை மாவட்டத்துக்குள் வரும் அந்தத் தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் அமல்படுத்தலாம்.

இந்தத் திட்டங்கள் தவிர வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரை பெறப்பட வேண்டும். ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டும், திட்டங்களை தொடங்காமல் இருந்தால், அதுபோன்ற திட்டங்களை ஆர்.கே.நகரில் தொடங்கக் கூடாது. ஆனால் சாலை போடுவது போன்ற தொடங்கப்பட்ட திட்டம் என்றால், அதை தொடர்ந்து நடத்தத் தடையில்லை.

ஆனால், மேற்கூறப்பட்ட திட்டங்கள் தொடர்பான தேர்தல் நடத்தை விதிகள் தவிர மற்ற அனைத்து நடத்தை விதிகளும், அதாவது, அமைச்சர்களின் பயணம், வாகன பிரசாரம், விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிடமாற்றம் உட்பட மற்ற அம்சங்களுக்கான அனைத்து விதிகளும் அந்த தொகுதி அடங்கியுள்ள மொத்த மாவட்டத்துக்கும் (சென்னை) பொருந்தும்.

சென்னையில் இருப்பதால், அமைச்சர்கள் தங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு செல்வதற்காக அரசு வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அதை தேர்தல் காரியங்களுக்காக அவர்கள் பயன்படுத்தக் கூடாது. இடைத் தேர்தலுக்காக பல்வேறு சிறப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிப்பது வழக்கம். அதுபோல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான குழுக்கள் அமைப்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அதுபோல் அந்தத் தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற தகவல்களை அதிகாரப்பூர்வமாக பெற்ற பிறகுதான் அந்தத் தொகுதியின் முக்கியத்துவம் குறித்து ஆய்வு செய்து கணக்கிடப்படும்.

மெட்ரோ ரெயில் திட்டம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்டதல்ல என்றாலும், அந்தத் தொகுதி மக்களையும் அது ஈர்க்கக் கூடிய திட்டமாக உள்ளது. எனவே அந்தத் தொகுதிக்கு வெளியே அந்தத் திட்டத்தை தொடங்க வேண்டும் என்றாலும் தேர்தல் கமிஷனின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆர்.கே.நகருக்குத்தான் வேட்பாளரே தவிர. மற்ற இடங்களில் அவரது செயல்பாட்டை தடை செய்ய முடியாது. சட்டசபை மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து திட்டங்களை அவர் அறிவிக்கலாம். ஆனால் ஆர்.கே.நகருக்கு தேர்தல் நடத்தை விதியால் தடை செய்யப்பட்ட திட்டங்களை அறிவிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!