இன்று பக்திதான் சநாதனத்தைக் காக்கிறது;!

இன்று பக்திதான் சநாதனத்தைக் காக்கிறது;!
ன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பதை அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் அறிஞர் அண்ணா. இன்றும் அதைத்தான் திமுகவினர் ஒரு மந்திரமாகவே முழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை அண்ணா எங்கிருந்து எடுத்தார்?
‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே’ (திருமந்திரம், பத்தாம் திருமுறை, ஏழாம் தந்திரம், 38. இதோபதேசம்) (உலகத்தார் பல சாதிகளைக் கூறுவாராயினும் உண்மையில் உள்ளது ஒரு சாதியே. உலகத்தார் பல கடவுளர்களைக் கூறிக் கொண்டாடுபவராயினும் உண்மையில் உள்ள கடவுள் ஒருவனே. முதலில், இவற்றை நீங்கள் நன்றாக உணருங்கள். உணர்ந்தால், எமனும் உங்களை நெருங்க மாட்டான்; வெட்கமின்றி, முன்னர் பிறந்து பிறந்து இறந்த பிறப்புகளிலே, மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையும் உங்களுக்கு இல்லாமல் போகும்) என்று திருமூலர் பாடியதிலிருந்துதான் அண்ணா எடுத்தார். திருமூலர் ஒன்றும் நாத்திகர் அல்லர். ஆத்திக அறியாமைகளையெல்லாம் மனத்திலிருந்து துடைத்தெறிந்து ஜொலித்த தத்துவ ஞானி. பிராமண எதிர்ப்பில் அவரோடு ஒப்பிட்டால், பெரியார் ஈ.வெ. இராமசாமி யெல்லாம் ஒன்றுமேயில்லை.
பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’ (திருமந்திரம், இரண்டாம் தந்திரம், 19. திருக்கோயிலிழிவு, பாடல்: 519)-இப்பாடலின் பொருளென்ன? -தம் பெயரில் மட்டுமே அதாவது பிறப்பால் மட்டுமே பார்ப்பான்/பிராமணன்/அந்தணன் என்று சொல்லிக் கொள்பவர்கள் எம்பெருமானை அர்ச்சனை செய்வதற்குச் சற்றும் தகுதியற்றவர்கள். அவர்கள் அர்ச்சனை செய்தால், அந்த நாட்டுக்கும் அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும் பொல்லாத வியாதிகளும் பஞ்சமும்தான் வந்து சேரும். ஆக, திருமூலர் சொல்வதென்ன? பிராமணன் என்னும் ஜாதி மட்டுமே அர்ச்சனை செய்யும் தகுதியைத் தந்து விடாது. உண்மையாகவே அறவழியைக் கடைப்பிடித்து வாழ்வோர் அனைவருமே அந்தணர்கள்தான். அவர்களே எம்பெருமானைத் அர்ச்சிக்கும் நிஜமான தகுதி பெற்றவர்கள்.
இப்படி கோயில் கருவறையில் ‘கசமுசா’ செய்த போலி அர்ச்சகர்கள் திருமூலர் காலத்திலும் இருந்திருக்க வேண்டும். இழிசெயல்காரர்களும் தங்கள் பிறப்பைக் காரணம் காட்டியே கோவில் அர்ச்சனைகளை விடாப்பிடியாகச் செய்திருக்க வேண்டும். அதனால்தான் இத்தனை கோபம் திருமூலருக்கு.இப்படி, சநாதனத்தைத் தோலுரித்துக் காட்டும் உண்மைகளை உரத்துப் பேசிய திருமூலரை – பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை – பக்தியைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ‘ஆன்மிகவாதிகள்’ யாரும் இன்றுவரை கண்டு கொள்வதேயில்லை.
‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பதுகூட வர்ணாசிரமத்திற்கு எதிராக இருந்ததால் அதையும் மறைத்தே வைத்தனர். அதை மேடைதோறும் பேசி, வெளியுலகுக்கு எடுத்துக் காட்டியது பெரியாரின் சீடரான அண்ணாதான். அவரைத் தொடர்வது திமுகவினர்தான். திருமூலரைப் பின்பற்றித்தான் தகுதியிருக்கும் எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று திமுக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதை நடைமுறைப் படுத்த முடிகிறதா?
சரி, திருமூலரை விடுங்கள். ஆன்மிகம் பேசும் சித்தரான சிவவாக்கியர் என்ன சொல்கிறார்?
‘பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முள்ளே…’ஜாதிப் பிரிவினையின்மேல் எத்தனை கோபம் சிவவாக்கியருக்கு?
இதைத்தான் கண்ணதாசன், ‘எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை உன்
சிந்தையிலே தான் பேதமடா’ என்று மிக எளிமையாகச் சினிமாவில் சொன்னார். அன்றும் சரி, இன்றும் சரி, எந்த ஆன்மிகப் பேச்சாளராவது திருமூலரையும் திருமந்திரத்தையும் சித்தர்களையும் பேசுகிறார்களா?
உண்மையைச் சொல்வதானால், இன்று ஆன்மிகம் பேசுபவர்கள் மிகமிகக் குறைவு. பக்திப் பிரசாரம் செய்பவர்கள்தான் அதிகம். பக்திதான் சநாதனத்தைக் காக்கிறது; வருமானத்திற்கும் வழி செய்கிறது. மக்கள் கோயிலுக்குச் செல்வது ஆன்மிகத் தேடலுக்காகவா? இல்லவே இல்லை. தங்கள் பிரச்னைகளுக்குப் பரிகாரம் கிடைக்குமென்னும் நம்பிக்கையால்தான் செல்கிறார்கள். அப்படித்தான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
‘பாவங்களுக்குப் பரிகாரம் தேடவே முடியாது’ என்றார் புத்தர்; கடவுளையும் மறுத்தார். அதனால்தான் -அவருடைய போதனைகள் எதுவும் தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படாது என்பதால்தான் மிகவும் சாமர்த்தியமாக அவரை ஒதுக்கி வைத்தார்கள். திருமூலரும் நாத்திகம் பேசவில்லை; பகுத்தறிவைத்தான் பேசினார்; போலிகளை அடையாளம் காட்டும் உண்மை பேசினார். இதைத்தான் போலி ஆன்மிகவாதிகளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர்கள் வழியில்தான் பெரியாரும் வந்தார். புத்தர் கடவுளைச் சாந்தமாக மறுத்தார்; ஆன்மாவை ஒப்புக் கொண்டார். பெரியாரோ எல்லாவற்றையுமே தடாலடியாக மறுத்தார். இதுதான் வித்தியாசம்.
All reactions:

5

error: Content is protected !!