தமிழர்கள் கிணற்றுத் தவளைகளா?

தமிழர்கள் கிணற்றுத் தவளைகளா?

ங்கில ஊடகங்களில் காஸா – இஸ்ரேல் போர் குறித்து விவாதிக்கிறார்கள். இரவு பத்து மணிக்கு NDTV-க்கு சென்றால், நாலைந்து பேர் ‘இந்தப் போர் எங்கே கொண்டு செல்லும் ?’ என்று பேசிக் கொண்டிக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சிகளில் இப்படியான விவாதங்கள் நிகழ்கின்றனவா? நான் பெரும்பாலும் சன் நியூஸ் சேனல்தான் பார்ப்பேன் (நேரம் குறைவாக இருப்பதால் ஒரு சேனலே போதுமென்பதுதான்). அதில் எவ்வளவு முக்கியமான சர்வதேசப் பிரச்சனையாக இருந்தாலும் விவாதம் அ.இ.அ.தி.மு.க – தி.மு.க என்று உள்ளூர் அரசியல்தான். மற்ற தொலைக்காட்சிகள் ஏதாவது விவாதம் நிகழ்த்தியிருந்தால் கூறுங்கள்.

பொதுவாகவே தமிழ் ஊடகங்களில் சர்வதேசச் செய்திகள் அதிகம் இடம் பெறாது – இடம் பெற்றாலும் மேலோட்டமாக இருக்குமே தவிர, ஆழமான அலசலாக விவாதமாக இருக்காது. வரலாற்றுத் தகவல்களைச் சில சமயம் மேலோட்டமாகச் சொல்வார்கள். இந்தப் போக்கிற்குத் தொடர்பே இல்லாமல் தமிழ்நாட்டில் பட்டதாரிகள் அதிகம், கல்வியில் முன்னேறிய மாநிலம், பெண்கள் ஆய்வுகளை மேற்கொள்வது தமிழ் நாட்டில்தான் அதிகம் எனப் பெருமை.

அது உண்மையானால், ஏன் சர்வதேசப் பிரச்சனைகளில் ஆங்கிலத்தில் நடக்கும் ஆழமான விவாதங்கள் தமிழில் நடப்பதில்லை? ஹிண்டு ஆங்கில ஏட்டில் வரும் விரிவான சர்வதேசச் செய்திகள், அலசல்கள் இந்து தமிழ் திசையில் வருவதில்லை? பிற செய்தித்தாள்களிலும் வருவதில்லை? தமிழில் உள்ளூர் செய்திகளைத்தான் படிக்க வேண்டும், கேட்க வேண்டும், ஆங்கிலத்தில் சர்வதேசச் செய்திகளை அலச வேண்டும் என்ற நிலை தமிழுக்கு இழுக்கில்லையா? தமிழ்த்தாய்க்கு நாம் செய்யும் அவமரியாதை இல்லையா?

ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி மட்டும் தமிழை உலக அரங்கில் பெருமைப்படுத்துமா? உலகம் என்றால் என்னவென்று தமிழ் மொழியில் நாம் பேச வேண்டாமா? இந்த அவல நிலைமையெல்லாம் என்றைக்கு மாறும்? என்றைக்குத் தமிழ் ஊடகங்கள் கிணற்றுத் தவளைகளாக இருக்காமல் “விசாலப் பார்வையால் உலகை விழுங்கும்” என்று தெரியவில்லை. பாரதிதாசனுக்கு சிலை வைத்தால் சோலி முடிந்தது என்று போய் விடுவோம் போல.

ராஜன் குறை கிருஷ்ணன்

error: Content is protected !!