எடப்பாடி பழனிசாமி முதல்வராகிறார்?

எடப்பாடி  பழனிசாமி முதல்வராகிறார்?

சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது.ஆட்சியமைக்கும் முயற்சியாக, ஆதரவு கடிதம் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்களுடன் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சசிகலா, இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.நேற்று இரவே, இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அதன்படி முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்மொழிவது என்பது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களான எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

edabadi  feb 14

தீர்ப்பு வெளியானதும் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார்.சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றி ஆளுநருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.மாலை 5.30 மணிக்கு அவரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி தந்தார். இதையடுத்து, மாலை 3.45 மணியளவில் கூவத்தூரில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பதற்காக சென்னை புறப்பட்டார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 11 பேர் சென்னைக்கு வந்தனர்.

C4oPvIFUEAEnLUs

சரியாக மாலை 5 மணியளவில் அவர்களின் வாகனங்கள் கிண்டி கவர்னர் மாளிகையை வந்தடைந்தன. எடப்பாடி பழனிச்சாமி உள்பட மொத்தம் 12 பேரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், “ எடப்பாடி பழனிச்சாமி தேர்வானது சட்டப்படி செல்லாது. எம்எல்ஏக்களை சுதந்திரமாக விட்டால் ஒபிஎஸ்க்குதான் ஆதரவு அளிப்பார்கள்” என்று தெரிவித்தார். அதேபோல், ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அணியில் உள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்ய யாருக்கும் உரிமையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அது சரி இந்த எடப்பாடியார் பற்றிய பயோ டேட்டா தெரியுமோ:

62 வயதான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின், நெடுகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிச்சாமி 1980-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

* எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில் ஜெயலிலதாவின் அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

* கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி வலுப்பெற முக்கிய பங்காற்றினார்.

* 1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1991-ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

* எடப்பாடி பழனிச்சாமி 1991, 2011, 2016 ஆம் ஆண்டுகளில், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

* 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

* 2011- 2016 ஜெயலிலதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சகம் மாற்றப்பட்ட போதிலும் மாற்றப்படாத அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.

* கடந்த மே மாதம் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* தொடர்ந்து ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்திலுள்ள 11 தொகுதிகளில், அதிமுக 10 தொகுதிகள் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

* 2017-ம் ஆண்டு ஜெயலிலதாவால் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

* ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்குப் பிறகு அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

error: Content is protected !!