ஒலிம்பிக் – பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வாங்கினார் சிந்து!

ஒலிம்பிக் – பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வாங்கினார் சிந்து!

ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் போராடி தோற்றதை  அடுத்து  சிந்துவுக்கு  வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் மிக அற்புதமாக ஆடிய பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று இரவு நடந்தது. ஆரம்பத்தில் பின்தங்கிய சிந்து, திடீர் புயலாக மாறி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டை மரின் கைப்பற்ற, கடைசி செட்டில் டென்ஷன் எகிறியது. இதில், மரினுக்கு சரிநிகர் ஈடுகொடுத்து ஆடிய போதிலும், சிந்துவால் வெற்றியை எட்ட முடியவில்லை.

pv sindhu aug 20

3வது செட்டை இழந்த சிந்து, 21-19, 12-21, 15-21 என்ற செட்களில் போராடி தோல்வி அடைந்து தங்கத்தை பறிகொடுத்தார். வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். மகளிர் மல்யுத்தத்தில் சாக்ஷி வெண்கலம் பெற்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை சிந்து.  மோடி உள்ளிட்ட  தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும்  வாழ்த்து தெரிவித்தனர்.

ஐதராபாத்தை சேரந்த பாட்மின்டன் வீராங்கனையான புசார்லா வெங்கட சிந்து என்பதன் சுருக்கமே பி.வி.சிந்து. இவரது தந்தை ரமணா, தாய் விஜயா இருவரும் வாலிபால் வீரர்கள். ஆனால் சிந்துவுக்கு சிறுவயது முதலே பாட்மின்டனில் ஆர்வம். தனது 8 வயது முதல் பாட்மின்டன் மட்டையை கையில் ஏந்த ஆரம்பித்த சிந்து, பயிற்சியாளர் கோபிசந்த் பயிற்சியில் பட்டை தீட்டப்பட்டார்.

6 சர்வதேச பட்டங்கள்:

சிந்து இதுவரை 6 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். 2011ம் ஆண்டு இந்தோனேஷிய ஓப்பனில் தனது முதல் சர்வதேச பட்டத்தை சிந்து வென்றார். 2013ம் ஆண்டு மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் தனது அடுத்த பட்டத்தை வென்று சாதித்தார். அதே ஆண்டு மக்காவ் ஓப்பனில் பட்டம் வென்றதுடன், அடுத்த 2 ஆண்டுகளிலும் மக்காவ் ஓப்பனில் தொடர்சியாக பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். 2016ம் ஆண்டில் மீண்டும் மலேசியா மாஸ்டர்ஸ் தொடரை வென்று சிந்து சாதித்துள்ளார்.

முதல் இந்தியர்:

2013ம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, இதில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து சொந்தமாக்கினார். 2014ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்று அசத்தினார். இதுதவிர 2014 காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார் சிந்து. இவரது சாதனையை பாராட்டி 2013ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Related Posts

error: Content is protected !!