நெக்ஸ்ட் ஜனாதிபதி யாராயிருக்கும்? டெல்லி பரபரப்பு

நெக்ஸ்ட் ஜனாதிபதி யாராயிருக்கும்? டெல்லி பரபரப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அறிவிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

pre feb 27

இந்த ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 776 உறுப்பினர்களும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளில் மொத்தம் உள்ள 4,120 உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு எம்.பி.க்கும் உரிய வாக்கு மதிப்பு தலா 708 ஆகும். மாநிலங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படும். அந்த வகையில், தமிழ்நாட்டில் சட்டப் பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு தலா 176 ஆகும்; உத்தரப் பிரதேச மாநில பேரவை உறுப்பினருக்கு 208ஆகும்.கடந்த 2012-இல் நடைபெற்ற ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,474; எம்.பி.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,408 ஆகும். ஒட்டுமொத்தமாக மக்கள் பிரதிநிதிகள் 4,896 பேரின் மொத்த வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும்.

ஆனால் மத்தியில் தற்போது ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் 282 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 56 உறுப்பினர்களின் பலம் உள்ளது. நாடு முழுவதும் பாஜக ஆளும் அல்லது அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணி ஆளும் 10 மாநில சட்டப்பேரவை களில் மொத்தம் 1,126 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய முக்கியமான மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு உறுப்பினர்கள் கிடையாது.

இதனிடையே அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி தற்போது ஃடெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயமாகி விட்டது. கடந்த பார்லிமெண்ட் தேர்தலின்போது, அத்வானிக்குதான் அதிக வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பாஜக மேலிடம் அறிவித்தது. இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிரதமர் கனவு தகர்ந்தது. இதனால் அப்செட்டான் அவர் சில காலம் கட்சிப் பணியில் இருந்து விலகியிருந்தார். இதைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலத்துக்குப் பிறகு அடுத்த ஜானாதிபதி வேட்பாளராக பாஜக சார்பில் அத்வானியின் பெயர் முன்மொழியப்படும் என்று பாஜக தலைவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

ஆனால் தற்போது வெளியான தகவல்படி ஜனாதிபதி பதவிக்கு அத்வானியின் பெயரை முன்மொழியாமல் பாஜவைச் சேர்ந்த வேறு மூத்த தலைவர்களின் பெயரை அக்கட்சி மேலிடம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளதாம். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் (74), ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு (59) ஆகிய பெண் தலைவர்கள், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டால் அதைப் பெண்களுக்கான அங்கீகாரமாகக் கருதும் பிரசாரமாக மேற்கொள்ளலாம் என்று பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், சுமித்ரா மகாஜன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டால் மக்களவைக்குத் தலைமை தாங்க வேறு ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்படும்.

இதையொட்டி இப்பதவிக்கான தேர்தலில் முன்மொழியும் வேட்பாளர்கள் பட்டியலில் சுமித்ரா மகாஜன், திரௌபதி முர்மு மட்டுமின்றி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்களை பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) முன்மொழிந்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான விவாதத்தை அந்த அமைப்பின் முன்னணித் தலைவர்கள் பாஜக மேலிடத்துடன் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் தற்போது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இத்தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடினால் அக்கட்சி உறுப்பினர்களின் பலம் ஜனாதிபதி தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படும்.

முன்னரே குறிப்பிட்டது போல தற்போது ஜனாதிபதித் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு மொத்தம் சுமார் 75 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு மதிப்பு கிடைக்க வேண்டும். இந்த முயற்சியில் பாஜக முன்மொழியும் வேட்பாளருக்கு வெற்றி கிடைக்குமா? என்பது, நடந்து வரும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும்

Related Posts

error: Content is protected !!