சென்னையில் கடற்கரை சாலைகள் + பாலங்கள் மூடல்!

சென்னையில் கடற்கரை சாலைகள் + பாலங்கள் மூடல்!

சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில் சென்னை போலீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செக்ரட்டரி அனுப்பி இருக்கும் கடித்ததில், ‘சூழலைப் பொறுத்து இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயலுங்கள். அதற்க்காக இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்கலாம். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாம். உருமாறிய கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பைக் ரேஸ் மற்றும் விபத்துக்களை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் நாளை இரவு மூடப்படும் என்றும், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!