நெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா!- முதல்வர் அறிவிப்பு

நெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா!- முதல்வர் அறிவிப்பு

பன்முகத் தன்மைக் கொண்ட நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்த தினமான ஜூலை 11-ஆம் நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (10.7.2020) வெளியிட்டுள்ள அறிக்கை :

புரட்சித் தலைவி அம்மாவின் அரசு, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நமது மாநிலம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களையும், சிறப்புகளையும், வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், மணிமண்டபங்கள், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், திருவுருவச் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை உருவாக்கி, அவற்றை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றது.

பேரறிஞர் அண்ணாவின் அன்பிற்கு பாத்திரமானவரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக அமைச்சராகவும் பணியாற்றிய நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் 11.7.1920-ல் பிறந்தார். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தனது மாணவர் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர், கருத்துவன்மையோடும், நகைச்சுவையோடும் பேசும் சிறந்த சொற்பொழிவாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாவலரின் பேச்சுத் திறனைக்கேட்டு வியந்த பெரியார் அவர்கள், நாவலரை தன் சுற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை பட்டி தொட்டி எங்கும் மேற்கோள் காட்டி, தன் கருத்துகளுக்கு வலு சேர்த்தவர் நாவலர் நெடுஞ்செழியன்அவர்கள். அவருடைய அறிவுத்திறனால், எல்லோராலும் “நடமாடும் பல்கலைக்கழகம்” என அழைக்கப்பட்டவர்.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள், “மாலைமணி” நாளிதழில் பொறுப்பாசிரியராகவும், “மன்றம்” என்ற இதழின் நிறுவனராகவும், “நம் நாடு” இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். “மொழிப் போராட்டம்”, “தீண்டாமை”, “திருக்குறளும் மனுதர்மமும்”, “நீதிக்கட்சியின் வரலாறு”, “பாவேந்தர் கவிதைகள்”, “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்” உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளவர்.

“மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், பகுத்தறிந்து பார்க்க வேண்டும், சிந்திக்க மறுப்பவன் அவனுக்கு தானே துரோகியாகிறான்,” என்ற நாவலரின் பேச்சு, தமிழர்களின் நெஞ்சங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்தது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார். பேரறிஞர் அண்ணா அவர்களால், “தம்பி வா! தலைமையேற்க வா! ஆணையிடு, கட்டுப்படுகிறோம்” என்று வாயாற புகழப்பட்ட பெருமைக்குரியவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

1977-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பின், அக்கட்சின் அவைத்தலைவராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும், திறம்பட பணியாற்றியவர். மேலும் அன்னாருடைய இறுதி மூச்சு வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையிலும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அமைச்சரவையிலும் நிதித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த போதும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த போதும், இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்த சிறப்புக்குரியவர்.

இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களை சிறப்பிக்கும் வகையில், அன்னாருக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்பதையும், அன்னாரது பிறந்த தினமான ஜூலை 11-ஆம் நாளை அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

அன்னாரின் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று, அன்னார் எழுதிய “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்” (தன் வரலாற்று நூல்) என்ற நூலை அரசுடைமையாக்குவதற்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!