ரத்தம் – விமர்சனம்!

ரத்தம் – விமர்சனம்!

கடி என்ற ஸ்பூஃப் வகைப் படங்கள் எடுத்து கோலிவுட்டில் கால் ஊன்றிய டைரக்டர் சி.எஸ். அமுதன் தன்னால் புது ஜர்னரிலும் படம் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முயன்றிருக்கும் படமே `ரத்தம்` . டைட்டிலில் இருந்தாலும் ரஜினி, விஜய், தனுஷ் பட ரேஞ்சில் டன் கணக்கில் ரத்ததைத் தெளிக்காமல் ஒரு த்ரில்லர் படத்தை வழங்கி அடடே சொல்ல வைத்திருக்கிறார். அதாவது தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் கொலைகளிலிருந்து, பொழுதுபோக்கிற்காக செய்யும் கொலைகள் வரை ஆயிரமாயிரம் வகைகள் உள்ளன.. ஆனால் இப்போது நாடெங்கும் அதிகமாகப் பேசப்பட்டு வரும் வார்த்தை ‘வெறுப்பரசியல்’. அந்த அநாகரிக அரசியலை மையமாக வைத்து சில பலரைக் கொலை செய்யும் ஒரு ஏஜென்சி ஒன்று இயங்குகிறது என்பதை கண்டு பிடிக்கும் ஜர்னலிஸ்ட் கதை இது.

அதாவது வேர்ல்ட் பேமஸான இருந்த இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டான விஜய் ஆண்டனி, சொந்த காரணத்தால் அந்த வேலையில் இருந்து ஒதுங்கி, தனது மகளுடன் போதையுடன் வாழ்ந்து வருகிறார். அச்சூழலில் இவரின் நண்பரான வானம் என்ற பத்திரிகை ஆசிரியர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். விஷயம் அறிந்த விஜய் ஆண்டனி மறுபடியும் ஜர்னலிஸ்ட் ஆக தன் பயணத்தை தொடர்கிறார். முதலில் தன் நண்பரான பத்திரிகை ஆசிரியரின் கொலை என்பது ஒரு நடிகரின் வெறித்தனமான ரசிகரால் செய்யப்பட்டது என்று அனைவரும் நம்ப விஜய் ஆண்டனிக்கு மட்டும் சந்தேகம் ஏற்படுகிறது. இதையடுத்து, அந்த கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, மேலும் சிலர் இதே பாணியில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய நெட் ஒர்க் ஒன்று இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அந்த நெட் ஒர்க் யார்?, கொலை செய்யப்பட்ட நபர்களுக்கும், அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை சொல்லியிருப்பது தான் ‘ரத்தம்’.

விஜய் ஆண்டனி.. வழக்கம் போல் தனக்கே உரிய பாணியில் இந்த ரோலைக் கடத்துகிறார். அவர் இண்டர்நேஷனல் அளவில் பேமஸான துப்பறியும் நிருபர் என்பதெல்லாம் மிகையாகப் பட்டது. ம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று நடிகைகளும் நாயகிகளாக அல்லாமல் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரமாக பயணித்திருக்கிறார்கள். மூன்று பேரும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், மஹிமா நம்பியாரின் அழகும், அதனுள் ஒளிந்திருக்கும் ஆபத்தும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.. ஆம். வில்லன் கூட்டத்தின் தலைவியாக மஹிமா நம்பியார் க்யூட்டான ஒரு கொடூர வில்லியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

ரொம்ப நல்ல எடிட்டராக நிழல்கள் ரவி தொடங்கி ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி என படத்தில் ஏகப்பட்ட பேர் வருகிறார்கள்.. போகிறார்கள். கேமராமேன் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சி கூட ரசிக்கும்படி இருப்பது சிறப்பு, மியூசிக் டைரக்டர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை பர்பெக்ட். அத்துடன். “ரத்தம்…ரத்தம்…” தீம் பாடல் மற்றும் புரோமோ சாங் இரண்டுமே கதைக்களத்திற்கு ஏற்ற பாடல்களாக இருக்கிறது.

எடுத்துக் கொண்டகதை புது ட்ராக்கில் இருந்தாலும் அதை சராசரிக்கும் குறைவான சுவாரஸ்யத்தில் கொடுத்திருக்கிரார் சி.எஸ் அமுதன். இந்த கொலைகளை எல்லாம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லாதது மட்டுமின்ரி க்ளைமாக்ஸில் சிட்டி கமிஷனர் ஆஃபீசுக்குள் போய் வில்லன் சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்கை எடுத்துக் கொண்டு குதிரை சவாரி மூலம் தப்பித்து வருவதெல்லாம் அந்த கால எம் ஜி ஆர் படங்களை பகடி செய்து அனுப்பி விடுகிறார். கூடவே வில்லியை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு வர சொல்லும் காரணமும் உப்பு சப்பில்லாமல் போய் விட்டது.

இப்படி ஒரு சினிமாவுக்கே உரிய குறைகள் சிலபல இருந்தாலும் இதுவரை தமிழ் சினிமா அணுகாத வெறுப்பரசியல்,,ஜாதி வெறி மற்ரும் கொலை செய்யும் ஏஜென்சி என புது விஷயங்களை சுட்டிக் காட்டி இருக்கும் பாணியைப் பார்க்கவே இப்படத்தை பார்க்க வேண்டும்

மார்க் 3/5

error: Content is protected !!