2020 ம் ஆண்டில் ஆகச்சிறந்த செயலிகளில் ஒன்றிது!

2020 ம் ஆண்டில் ஆகச்சிறந்த செயலிகளில் ஒன்றிது!

2020 ம் ஆண்டில் ஆகச்சிறந்த செயலிகளை பட்டியலிட்டால், ம்ஹம் ( https://www.mmhmm.app/) செயலியை அதில் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். செயலியின் பெயரே விநோதமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு விதத்தில் இந்த செயலியின் பெயர் விநோதம் அதன் நோக்கத்திற்கு பொருத்தமாகவே இருக்கிறது. அலுப்பூட்டக்கூடிய ஜூம் சந்திப்புகளை சுவாரஸ்யமாக்குவது தான் அந்த நோக்கம்.

இந்த செயலியை ஏன் இந்த ஆண்டின் சிறந்த செயலிகளில் ஒன்றாக கருத வேண்டும் என இப்போது புரிந்திருக்குமே!

ஆம், இது காலத்தின் தேவையை புரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட செயலி. ஸ்டார்ட் அப் மொழியில் கூறுவது என்றால், ஒரு பிரச்சனைக்கு தீர்வாக உருவாக்கப்பட்ட செயலி.

அலுப்பூட்டும் ஜூம் கூட்டங்கள் தான் அந்த பிரச்சனை. இதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று உலகை முடக்கிப்போட்ட போது, நேரடி சந்திப்புகளையும், நிகழ்ச்சிகளையும் தவிர்த்து பலரும் ஜூம் வீடியோ சந்திப்புகளுக்கு மாற வேண்டியிருந்தது.

வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழலில், வீடியோ வாயிலாக சந்திக்கொள்வது முதலில் அருமையாக தான் இருந்தது. ஆனால், வீடியோ சந்திப்புகள் அதிகரித்த போது, பலரும் அதன் அயர்சியை உணர்ந்தனர்.

நேர் சந்திப்புகளில் களைத்துப்போவதையும், சுவாரஸ்யம் குறைவதையும் போக்க பல வழிகள் உண்டு. ஆனால், மெய்நிகர் சந்திப்புகள் அலுப்பூட்டலாம். அதுவும், தொடர்ந்து வீட்டியோ வழியே தான் சந்திக்க வேண்டும் என்றால், பிரச்சனை தான்.

இது வீடியோ சந்திப்புகளில் உள்ள பிரச்சனையா அல்லது இயல்பு நிலைக்கான ஏக்கமா என்று தெரியவில்லை. ஆனால், பலரும் வீடியோ வழி கூட்டங்கள் என்றால் நொந்து போகத்துவங்கினர்.

இந்த பின்னணியில் தான், ம்ஹம் செயலி அறிமுகமானது. இந்த செயலி ஜூம் சந்திப்புகள் அல்லது கூட்டங்களை சுவாரஸ்யமாக்கும் வகையில், அழகான பின்னணி வசதியை அளித்தது. வெறும் பின்னணி வசதி மட்டும் அல்ல, வீடியோ பரப்பில் மெய்நிகர் அறைகளை உருவாக்கி கொள்ளவும் வழி செய்தது.

மேலும், வீடியோவில் தோன்றுபவர்கள் தங்கள் உருவங்களை சிறியதாக்கலாம். எந்த இடத்தில் வேண்டுமானால் திரையில் பொருத்திக்கொள்ளலாம். இன்னொரு நபரை உடன் அழைத்து அவருடன் இணைந்து கூட்டத்தை நடத்தலாம்.

இப்படி பல மெய்நிகர் வசதிகள் மூலம், ஜூம் கூட்டங்களை சுவாரஸ்யமாக மேற்கொள்ள இந்த செயலி வழி செய்தது.

இந்த செயலிக்கான விளக்கம் இதோ:

சைபர்சிம்மன்

error: Content is protected !!