பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும்! – ஆனா நடக்காது.

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும்! – ஆனா நடக்காது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 லட்சம் பேர் வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வுகளை நடத்தி முடிக்க இதுவே சரியான தருணம், இல்லையேல் மாணவர்களுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என என தெரிவிக்கப்பட்டதை சென்னை ஐகோர்ட் இவ்வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதை அடுத்து திட்டமிட்டப்படி தேர்வு நடக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி வினித் கோத்தாரி தலைமையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில் அதனை மீறி ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படுவது ஏன்? கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்க காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா? லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜூலை 2வது வாரத்தில் பொதுத் தேர்வை நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடவே ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், இன்றைய விசாரணை அரசு தலைமை வழக்கறிஞர் 2.30 மணிக்கு ஆஜராகவில்லை என்றால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஐகோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன. மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த ஐகோர்ட் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்?. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!