ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் எல்லாரும் எம் எல் ஏ. ஆயாச்சு!!

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் எல்லாரும் எம் எல் ஏ. ஆயாச்சு!!

தமிழ் நாடு அசெம்பிளி 15-வது பேரவையின் முதல் கூட்டம்இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

mla amy 25

காலை 10.48 மணியளவில் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது திமுக உறுப்பினர்களும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர்.பின்னர் சரியாக 10.53 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது, அமைச்சர்களும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று மேஜையைத் தட்டி ஓசை எழுப்பி ஆரவாரத்துடன் முதல்வரை வரவேற்றனர்.

முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். முதல்வரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.பின்னர், அவையின் தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்னிலையில் உறுப்பினர்கள் பதவியேற்றனர். முதலாவதாக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், முன்னாள் அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் அகர வரிசைப்படி பதவியேற்பு நடைபெற்றது.

மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேலுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தற்காலிக சபாநாயகர் செம்மலை, “சீனிவேல் மறைவுச் செய்தி அறிந்து பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்துள்ளது. அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

பின்னர் மறைந்த உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், முதல்வர், அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது.

error: Content is protected !!