நேபாளம் கலவர பூமியானதன் காரணம் இதுதானா? – இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி!

இமயமலைச் சாரலில் அமைதியாக இருந்த தேசமான நேபாளம், கடந்த சில நாட்களாகக் கலவர பூமியாக மாறியுள்ளது. நேற்று நடந்த போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? 2008-க்குப் பிறகு நேபாளத்தில் நடந்த மாற்றங்கள்தான் இந்தக் கலவரங்களுக்கு வித்திட்டதா? இந்த நிகழ்வுகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கக்கூடுமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்வது அவசியம்.
மன்னராட்சியிலிருந்து மதச்சார்பற்ற நாடாக…
2008 வரை, நேபாளம் ஒரு மன்னராட்சியின் கீழ், இந்து நாடாக இருந்து வந்தது. ஆனால், அதன் பிறகு வெளிநாட்டுச் சிந்தனைக் குழுக்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, மாவோயிஸ்டுகளின் போராட்டம் வலுப்பெற்ற நிலையில், மன்னராட்சி கலைக்கப்பட்டு, ஜனநாயகம் என்ற பெயரில் வெளிநாட்டுச் சிந்தனைகளின் தாக்கம் அங்கு வேரூன்றியது. அதன் விளைவாக, நேபாளம் ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 2015-ல் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது.
இந்த மாற்றம் நேபாளத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைத்தது. கடந்த 17 ஆண்டுகளில் 13 அரசுகள் மாறி, அரசியல் நிலையற்ற தன்மை அதிகரித்தது. இந்தச் சூழலில், வெளிநாட்டுச் சிந்தனை அமைப்புகள் நேபாளத்தில் ஆறாகப் பெருகின. வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி, இளைஞர்களைக் குறிவைத்துத் தீவிரவாதக் குழுக்களில் சேரத் தூண்டியது.
மதமாற்றங்களும் பாரம்பரிய அடையாளங்களும்
நேபாளத்தின் மதச்சார்பற்ற கொள்கை, மதமாற்றங்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டது. பாரம்பரிய இந்து மத அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாகக் குலையத் தொடங்கியது. இது பெரும்பான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி, வெளிநாட்டு சக்திகள் இந்தியாவுக்கு எதிரான போக்கை நேபாளத்தில் வளர்த்தன. மணிப்பூர் கலவரத்தின் பின்னணியிலும் நேபாளத்திலிருந்து செயல்பட்ட வெளிநாட்டுச் சிந்தனைக் குழுக்களின் பங்கு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நேபாள அரசின் கையாலாகாத்தனம், ஊழல், விலைவாசி உயர்வு, விவசாய நசிவு போன்ற சமூகப் பிரச்சனைகளை அதிகரித்தது. போதைப்பொருள் பழக்கம், குற்றச் செயல்கள், சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்கள் போன்றவையும் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றன. இதனால், அரசு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்தது. இது, வெளிநாட்டுச் சிந்தனைகளால் தூண்டப்பட்ட இளைஞர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி, போராட்டம் வெடிக்கக் காரணமாக அமைந்தது.
மன்னராட்சிக்கான ஆதரவு ஏன் அதிகரிக்கிறது?
மக்களின் அதிருப்தி, மீண்டும் மன்னராட்சியை நோக்கிய ஒரு மாற்றத்தை விரும்புகிறது. “மன்னராட்சியே பரவாயில்லை, மீண்டும் மன்னராட்சி வேண்டும்” என்ற குரல்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி (RPP) போன்ற மன்னரை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இது, மத அடையாளத்துடன் கூடிய ஒரு ஆட்சி அமைந்தால், அமைதி திரும்பும் என்ற மக்களின் நம்பிக்கையை உணர்த்துகிறது.
சிறுபான்மையினருக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்களும், இந்துக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மதராசாக்கள் முளைத்ததும், ஜெய்ஷ்-இ-முகம்மது, இஸ்லாம் சங் நேபால் போன்ற அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதும் மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. 2025-ல் அனுமதியின்றி வெளிநாட்டிலிருந்து சிலர் மதப் பாடம் கற்பித்தது இந்த அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்தியாவுக்குப் பாடம்…
நேபாளத்தின் இந்த நிலைமை இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. சமூக அமைதியைக் குலைக்கும் வெளிநாட்டுச் சக்திகள், உள்நாட்டுப் பிரச்சனைகளைப் பயன்படுத்தி, மதப் பிளவுகளையும், தீவிரவாதச் சிந்தனைகளையும் தூண்ட முடியும். கட்டுப்பாடற்ற ஊழல், இளைஞர்களைத் தவறாக வழிநடத்துதல், மற்றும் வெளிநாட்டுத் தலையீடு ஆகியவை ஒரு தேசத்தை எப்படிச் சீரழிக்கும் என்பதற்கு நேபாளம் ஒரு உதாரணம்.
மத அடையாளம் உறுதியாக இருந்தவரை நேபாளம் அமைதியாக இருந்தது. ஆனால், புதிய சிந்தனைகள் புகுந்ததும், இளைஞர்கள் வழிநடத்தப்பட்டு, வளர்ச்சி, அமைதி, ஒழுக்கம் என அனைத்தும் குலைந்து, இன்று அது போர்க்களமாக மாறியுள்ளது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் ஒரு எச்சரிக்கை மணி. வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு மற்றும் பிரிவினைவாதச் சிந்தனைகள் நமது சமூக அமைதியைக் குலைக்காமல் பாதுகாக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நிலவளம் ரெங்கராஜன்