விமானப்படைக்கு தேஜாஸ்சின் வருகை எதைக் காட்டுகிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

விமானப்படைக்கு  தேஜாஸ்சின் வருகை எதைக் காட்டுகிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமை யிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேஜாஸ் விமானங்கள் இந்தியாவிற் குள்ளேயே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் எனும் மத்திய அரசு நிறுவனத்தில் தயாரிக்கப்படுவதாகும். இந்நிறுவனம் பாதுகாப்புத்துறையின் கீழ் வருவதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் கோரப்பட்ட விமானங்களின் அளிப்பு இப்போது அமைச்சரவையின் ஒப்புதல் மூலம் விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. இதில் என்னச் சிறப்பு? முதல் சிறப்பு மத்திய அரசின் தற்சார்புக் கொள்கை. தேஜாஸ் விமானங்கள் 50% இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிர் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் 60% வரை உயர்த்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை போர் விமானங்களை அயல்நாடுகளிலிருந்துதான் பெற்று வந்தோம். முதன் முறையாக உள் நாட்டுத் தயாரிப்பு ஒன்றை போர் முனைக்கு எடுத்துச் செல்லும் வகையில் உற்பத்திச் செய்து படையிலும் சேர்த்துள்ளோம். இவை இலகுரக விமானங்களாகும். தேஜாஸ் சில பிரத்யேகப் போர்ச் சூழல்களுக்கு ஏற்றவாறும், காலச் சூழல்களுக்குப் பொருந்தி சண்டையிடத் தக்கவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதே அடுத்தச் சிறப்பு.

இப்போது வாங்கப்படும் தேஜாஸ் மார்க்1-ஏ போர் விமானங்கள் ஒன்றிற்கு ரூபாய் 550 கோடி விலையாகக் கொடுக்கப்படுகிறது. இது ஏற்கனவே ஹெச் ஏ எல் நிறுவனத்தால் உருவாக்கப் படும் சுகோய்-30 எம் கே ஐ விமானத்தை விட ரூபாய் 120 கோடி அதிகமாகும். சுகோய் விமானங்கள் ரூபாய் 430 கோடி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதிக விலைக்குக் காரணம் இதில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன அம்சங்களாகும். இந்த அம்சங்களில் ரேடார், ஜாமர் போன்றவை அடங்கும். மேலும் பராமரிப்பு, வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி ஆகியவை யாலும் விலைக் கூடுகிறது. இதனால் இந்த விமானங்களை நான்காவது தலைமுறை பிளஸ் போர் விமானங்கள் எனப் பாதுகாப்புத்துறை அழைக்கிறது. இந்த விமானங்களைப் பழுதுபார்க்க தங்களது தளங்களிலேயே வசதி ஏற்படுத்தத் தனியாக ரூபாய் 1,202 கோடியைப் பாதுகாப்புத் துறை வழங்குகிறது.

ஹெச் ஏ எல் இந்த விமானங்களைத் தயாரிக்க சுமார் 500 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. பெரிய அளவில் உதிரிபாகங்களை இணைத்து முழு தேஜாஸ்சை உருவாக்குவதற்கு நான்கு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் கோவையில் இறக்கைப் பகுதிகளை உருவாக்கும் எல்&டியின் பிரிவும் அடங்கும். விமானப்படை 6 ஸ்குவாட்ரன் தேஜாஸ் போர் விமானங்களை வைத்திருக்கும். மேலும் அதி நவீன மார்க் 2 வடிவமும் எதிர்காலத்தில் இணையவுள்ளது.

சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் ராஃபேல் போர் விமானங்களை வாங்குகின்ற சமயத்தில் எழுந்தக் குற்றச்சாட்டு அரசு ஹெச் ஏ எல்லைப் புறக்கணித்து அதை பாழடிக்கிறது என்பது. தேஜாஸ் விமானங்களை வாங்கும் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் ஹெச் ஏ எல்லின் பங்குகள் 14% வரை உயர்வு கண்டுள்ளன. ராஃபேல் விமானங்களை ஹெச் ஏ எல் தயாரிக்கும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்பதால் அந்நிறுவனம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தேஜாஸ்சின் வருகை ஹெ ஏ எல்லைத் தொடர்ந்து முன்னணியில் வைத்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!