செயற்கை நுண்ணறிவால் மனித கலையிலக்கியம் அழிந்துவிடுமா?

செயற்கை நுண்ணறிவால் மனித கலையிலக்கியம் அழிந்துவிடுமா?

ன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.  இந்தியா டுடே இணையதளப் பக்கத்தில் இன்று ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று கண்டேன்.  ஓர் எழுத்தாளர் சாட் ஜிபிடி மென்பொருளை பயன்படுத்தி  ஒரே வருடத்தில் 100 நாவல்கள் எழுதி 500 பிரதிகள் விற்பனை செய்துள்ளார்.  உங்களின் மேற்கத்திய நாட்டு பயணங்களில் இது குறித்து நீங்கள் நிறைய விவரங்களை அறிந்திருக்கக்கூடும். இத்தகைய செயற்கை எழுத்து வகை  அதிகமானால் தற்போதுள்ள இலக்கியவாதிகளுக்கு சவாலாக இருக்குமா அல்லது அஜிதன் போன்ற இளைய தலைமுறைக்கு புதிய வாசலாக அமையுமா?

கி.ரா. பற்றிய  சமீபத்திய பதிவு ஒன்றில்  “கவித்துவம், தரிசனம் இரண்டுமே இலக்கியத்தின் உச்சங்களை நிறுவுபவை என்பதே என் மதிப்பீடு” என்று சொல்லியிருந்தீர்கள். இந்த செயற்கை எழுத்து வகை மூலம் நல்ல இலக்கிய content வெளிவந்தால் அதை வரவேற்பீர்களா?  எழுத்து இருக்கும் ஆனால் எழுத்தாளர் என்கிற ஆளுமை இல்லாமல் போகும் என்கிற சூழல் வருமா? யார் வேண்டுமானாலும் எளிதாக எழுதித்தள்ளலாம் என்ற நிலைமை உருவானால் உண்மையான இலக்கியவாதிகளை பொருட்படுத்தாத தமிழக அறிவுச்  சூழலில் இனி நல்ல எழுத்தாளர்களின் இடம் என்னவாக இருக்கும்  என்கிற கவலையோடு உங்கள்  கருத்துக்களை  எதிர்பார்க்கிறேன்.

https://www.indiatoday.in/technology/news/story/author-used-chatgpt-to-write-over-100-novels-in-less-than-a-year-sold-over-500-copies-2383999-2023-05-25

நா.சந்திரசேகரன்

சென்னை

அன்புள்ள நா.சந்திரசேகரன்,

முதல் விஷயம், அப்படி இலகுவாக கலையிலக்கியம் உருவாகுமென்றால் உருவாகட்டுமே. அதை ஏன் தடுக்கவேண்டும்? நல்லதுதானே அது? மனிதனால் உருவாக்கப்படும் கலையிலக்கியம் அழிந்துவிடுமென்றால் அழியட்டுமே. அதை ஏன் கஷ்டப்பட்டு பேணவேண்டும்? செயற்கை நுண்ணறிவுக்கு முன்பு – பின்பு என உலக இலக்கியம் இரண்டாக இருந்துகொண்டிருக்கும் இல்லையா? இருந்துவிட்டு போகட்டுமே. இந்த உலகில் எதையாவது நாம் ‘நிரந்தரமாக’ நிலைநிறுத்த போராடவேண்டுமா என்ன?

நான் கலையிலக்கியங்களை புரிந்துகொள்ளும் விதம் இத்தகைய பதற்றங்களுக்கு அப்பாற்பட்டது. கலையின் உயிர் இருப்பது அதன் ’முளைமுனையில் (stem cell) மட்டுமே. அதாவது இதுவரை எழுதப்பட்ட அனைத்தையும் கடந்து, முற்றிலும் புதியதாக ஒரு முன்னகர்வு நிகழுமிடத்தில். அதை செயற்கை நுண்ணறிவு நிகழ்த்தமுடியாது என்று நம்புகிறேன் -செயற்கை நுண்ணறிவு செயல்படும் விதத்தை நுணுக்கமாக அறிந்த பிறகே இதைச் சொல்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு இதுவரை எழுதப்பட்ட இலக்கியம், உருவான கலை, பதிவான சிந்தனை ஆகியவற்றை தன் தரவுக்களஞ்சியமாகக் கொள்கிறது. நிகழ்தகவுகளையும் இணைவுகளையும் கொண்டு (Permutations and Combinations) அதில் இருந்து புதியனவற்றை உருவாக்குகிறது. அதையே அதன் படைப்புமுறை என்று சொல்லலாம். அந்நிகழ்தகவுகள் முடிவிலி வரைச் செல்லும் அளவு ஏராளமானவை. ஆகவே ஏராளமான புத்தம்புதிய சாத்தியக்கூறுகளை அது உருவாக்கமுடியும். பிரமிக்கத்தக்க வேகம் அதற்குண்டு. நிகழ்தகவுகளை, இணைவுகளையும் உருவாக்குவதில் மானுட மூளையின் வேகத்தைவிட பலமடங்கு அது வேகம் கொண்டது. ஆகவே பல்லாயிரக்கணக்கான வடிவங்களை மிகமிக விரைவாக அது உருவாக்கித் தள்ளமுடியும்.

ஆனால், கலையும் சிந்தனையும் நிகழ்தகவுகளாலோ இணைவுகளாலோ உருவாக்கப்படுவன அல்ல. அவற்றின் செயல்முறையில் நிகழ்தகவுகளும் இணைவுகளும் உள்ளன. ஆனால் அவற்றின் முளைமுனை இரண்டு முடிவிலிகளின் சந்திப்புப் புள்ளி. இரண்டு முடிவிலிகளின் முரணியக்கம் உருவாக்கும் சாத்தியக்கூறுதான் கலையும் சிந்தனையும். ஒன்று, மானுட அனுபவம். அது பலகோடிபேரின் வாழ்க்கை. அந்தப் பலகோடிபேர் ஒருவரோடொருவர் கொள்ளும் தொடர்புகள், அந்தப் பலகோடிபேர் இயற்கையுடன் கொள்ளும் தொடர்புகள் ஆகியவற்றாலானது அந்த வாழ்க்கைக் களம். அது கோடானுகோடானுகோடி சாத்தியக்கூறுகள் கொண்டது. முன்னரே எந்த அதியதியதிதிறன் கணிப்பொறியாலும் வகுத்துவிடமுடியாத அளவு பெரியது. வகுக்க முடிந்தால் அதன்பின் எதிர்காலமென்பதே இல்லை. தற்செயலென்பதே இல்லை. அப்படி ஒரு மகாமகோ கணிப்பொறி வந்து டக்ளஸ் ஆடம்ஸின் கதைகளில் போல மொத்தப் பிரபஞ்சத்திற்கும் ஒரு என்ஸைக்ளோபீடியா காலக்ஸியா போட்டுவிட்டால் அப்போது கவலைப்படுவோம், சரியா?

இரண்டாவது முடிவிலி என்பது மானுட மூளை. அதன் கோடானுகோடானுகோடி நியூரான்கள் உருவாக்கும் முடிவிலி. அவ்வாறு கோடானுகோடானுகோடி மூளைகள் இங்குள்ளன. அவையனைத்தும் ஒன்றுடனொன்று இணைந்துகொண்டே இருக்கின்றன. மொழியால், உருவாகிவரும் தொழில்நுட்பங்களால். மானுடமூளை எதிர்காலத்தில் பிற உயிர்களின் மூளைகளுடன் நேரடியாகவே தொடர்புகொள்ளக் கூடும். எனில் அது இன்னும் ’பெரிய’ முடிவிலி ஆகும். (!) .

மானுட மூளையின் சாத்தியக்கூறுகளை இயற்கையின் சாத்தியக்கூறுகளாக, இயற்கையிலும் பிரபஞ்சத்திலும் உள்ளுறைந்திருக்கும் நுண்ணறிவொன்றின் சாத்தியக்கூறுகளாகவே நான் காண்கிறேன். ஒரு வைரஸ் ஓர் உருமாற்றத்தை அடைகிறது. ஓர் எறும்பு புதியதாக ஒன்றை கற்றுக்கொள்கிறது. மனிதனில் ஒரு புதிய கண்டுபிடிப்போ படைப்போ நிகழ்கிறது. இவை எல்லாமே ஒன்றுடனொன்று தொடர்புடையவை. இங்கனைத்திலும் உள்ளுறையும் ஒரே நுண்ணறிவொன்றின் வெளிப்பாடுகள். ஆகவே மானுட அறிதல், படைப்புத்தன்மை மாறிக்கொண்டே இருக்கும். புதியன பிறந்துகொண்டே இருக்கும். எதுவும் அப்படியே நீடிக்காது. சில அழியும். சில வளரும். அனைத்தும் உருமாறும்.

அறிவும் படைப்புத்தன்மையும் அப்படி நம் சாத்தியக்கூறின் அதி எல்லையில் இருந்து மேலும் மேலும் வளர்ந்து முன்னகர்பவை. அது இயற்கையின் ஆணை. ஏதோ பிரபஞ்ச நெறி. செயற்கை நுண்ணறிவும் அதன் ஒரு பகுதியே. ஆகவே அது வரவேற்புக்குரியதே. அதனால் அழிவுகள் நிகழ்ந்தால் அதுவும் இயற்கையின் ஆணை. அதன் விளைவான ஆக்கமும் அந்த ஆணையே.

செயற்கை நுண்ணறிவு நிகழ்தகவுகளின் வழியாக உருவாகும் படைப்புகள் கட்டின்றி பெருக்கும். எந்திரக்கலை, எந்திரப்படைப்புகள் பெருகும். அவை ஒருவேளை நமக்குரிய சராசரி படைப்புத்தேவைகளை நிறைவேற்றும். அவை நம் சாத்தியங்களின் எல்லைக்குள் நிலைகொள்ளும். சாத்தியங்களின் எல்லையை மீறிச்செல்ல துடிக்கும் சில புள்ளிகள் அப்போது உருவாகும். அவையே அன்று கலை என்று அடையாளம் காணப்படும். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் நிகழ்தகவுகளின் படைப்புக்கும், அதிஎல்லையில் மீறல் வழியாக நிகழும் புதிய படைப்புக்குமான வேறுபாடு துல்லியமாக ஆகும். அந்த வேறுபாட்டை நிறுவும் கொள்கைகள் உருவாகி வரும்.

இந்த நிகழ்தகவுகளின் படைப்பு ஒரு தொழிற்சாலை உற்பத்திப்பொருள் போல ஒருவகை நுகர்பொருளாக இருக்கும். எல்லைகளை மீறத்துடிக்கும் கலை அதில் இருந்து வேறுபடுத்தப்பட்டு மதிப்பு மிக்க கலையாக மாறிவிடும். இன்று ஒரு தொழிற்சாலைப் பொருளின் கச்சிதம், அழகு, பயன்பாடு மூன்றும் கலைப்படைப்புக்கு அமைவதில்லை. ஆனால் கலைப்படைப்புக்கே மதிப்பு. ஏனென்றால் அதில் முன்பில்லாத ஒன்று உள்ளது. அந்தப் புதுமை அதுவரை இருந்த எல்லைகளை கடப்பதன் விளைவு.

ஒருவேளை செயற்கை நுண்ணறிவு நிகழ்தகவுகளைக்கொண்டு மனிதர்கள் செய்யும் செயற்கைக்கலையை மிகையாக உருவாக்கி, மலிவாக்கி, மெய்யான கலையின் மதிப்பை கூட்டுமோ என்னவோ? இன்று ஒரு தொழிற்சாலைக் கம்பளத்திற்கும் கையால் செய்யப்படும் பிறிதொன்றிலாத கம்பளத்திற்கும் இடையே உள்ள விலைவேறுபாடு திகைக்கச் செய்வது அல்லவா?

ஜெ

இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்து விதவிதமாக விவாதிப்பவர்கள் எவரும் ஏறத்தாழ இந்த பிரச்சினையை கற்பனையின் எல்லா சாத்தியங்களுடனும் மிக விரிவாகப்பேசிய என்னுடைய ‘இலக்கியவடிவங்கள் நேற்று இன்று நாளை’ என்னும் அறிவியல்புனைகதையை வாசித்ததாகவே தெரியவில்லை.  

error: Content is protected !!