இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் ; கவுகாத்தியில் திறக்கப்பட்டது!

இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் ;  கவுகாத்தியில் திறக்கப்பட்டது!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி ப்ரெய்லி முறை நூல்களைக் கண்டுபிடித்த லூயிஸ் ப்ரெய்லியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை, காம்ரூப் மாவட்ட காவல்துறை ஆணையாளர் அங்கமுத்து திறந்து வைத்தார்.

luis jan 5

இந்த நூலகத்தில் பாடத்திட்ட நூல்கள், இதழ்கள், பொது அறிவு நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 6000 ப்ரெய்லி நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலகத்தை ஆம்வே வாய்ப்புருவாக்க அறக்கட்டளை (AOF) மூலம் நிறுவப்பட்டுள்ளது. அந்நிறுவனம் நூலகப் பராமரிப்பிற்காக மாதம் தோறும் ரூ.6000 அளிப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்த நூலகத்தைத் தொடர்ந்து மேலும் 31 நூலகங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்படும் என்றும் அவற்றில் நான்கு நூலகங்கள் வடகிழக்கு மாவட்டங்களில் உருவாக்கப்படும் என்றும் ஆம்வே தெரிவித்துள்ளது.

அசாம் மாநில உள்துறை அமைச்சம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் படி, அம்மாநிலத்தில் 15.6 லட்சம் பார்வையற்றோர் இருந்தனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 4 சதவீதம் ஆகும். அதன்படி, இந்தியாவின் அதிக பார்வைக்குறைபாடு உடைய மாநிலம் அசாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அது சரி ப்ரெய்லி உருவான வரலாறு தெரியுமா?

பார்வையற்றவகளால் படிக்கவே முடியாது என்று முன்பெல்லாம் நம்பிக்கொண்டிருந்தார்கள். படிக்கவேண்டும் என்றால் வார்த்தைகளை விழியால் பார்ப்பதால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி, விழியிழந்தவர்களாலும் படிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் லூயி ப்ரெய்லி.

பிரான்ஸை சேர்ந்த இந்த சிறுவன் மூன்று வயதிலிருந்தே பார்வையற்றவன். ஆனால் படிக்கவேண்டும் என்பதில் அலாதி ஆர்வம் கொண்டவன். பார்வையில்லை என்ற ஒரே ஒரு காரணத்தினால் தமது திறமையும் தமது அறிவும் பூட்டி வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான் அவன். இதற்க்கு விடை கண்டுபிடித்தே தீருவது என்று அவன் தீவிர தேடலில் இறங்கியபோது கண்டுபிடித்தது தான் இன்று உலகம் முழுதும் பார்வையற்றவர்கள் படிப்பதற்கு வழி(விழி) காட்டியாக திகழும் ‘ப்ரெய்லி எழுத்து முறை.

1809 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தான் ப்ரெய்லி. குதிரையை ஓட்ட பயன்படும் பெல்ட்டுகள் மற்றும் இதர தோல் பொருட்களை செய்வதில் அவர் தந்தை மிகவும் எக்ஸ்பர்ட். ‘தனது பட்டறையில் அது போன்ற பணிகளுக்கு லெதரில் துளையிடுவதற்கு மிகவும் கூரிய கருவிகளை பயன்படுத்துவார். குத்தூசியும் அதில் ஒன்று. குழந்தை ப்ரெய்லி அவன் தந்தையின் கருவிகளை வைத்து விளையாடும் போது குத்தூசி தவறி அவன் கண் மீது விழுந்துவிட்டது. ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் கண்ணில் புண் ஏற்பட்டு செப்டிக் ஆகிவிட, அந்த கண்ணில் பார்வை பறிபோனது. நாளாவட்டத்தில் இன்பெக்ஷன் மற்ற கண்ணிற்கும் பரவி அந்த கண்ணிலும் பார்வை பறிபோனது. ஐந்து வயதாகும்போது ப்ரெய்லிக்கு இரு கண்ணிலும் பார்வை கிடையாது.

இரண்டு கண்ணிலும் பார்வையின்றி இருப்பது ஆரம்பத்தில் அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் போகப் போக பழகிவிட்டது. பார்வை இல்லையென்றாலும் மற்றவர்களை போல நார்மலாக வாழ பழகிக்கொண்டான். பள்ளி செல்வதை அவன் நிறுத்தவில்லை. எந்த வித தயக்கமும் இன்றி பள்ளி சென்றான். பள்ளியில் அவன் தான் நம்பர் ஒன் ஸ்டூடன்ட். படிப்பில் படு கெட்டி. தன்னுடைய பார்வை குறைபாடு தன்னுடைய லட்சியத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

ஆனால் தான் படித்த பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் சௌகரியங்கள் (INFRASTRUCTURE) தன்னுடைய லட்சியத்திற்கு துணை செய்யும் வகையில் இல்லை என்பதை உணர்ந்தான். பாரீஸ் நகரில் பார்வையற்றோர் களுக்கென்றே ஒரு சிறப்பு பள்ளியிருப்பதை பற்றி கேள்விப்பட்டான். பிறகு அவன் சிறிது கூட யோசிக்கவில்லை. அந்தப் பள்ளியில் சென்று சேர்வதே அவன் முதல் வேலையாக இருந்தது.

பள்ளியில், பார்வையற்றோருக்கான சிறப்பு புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டான். இருக்கிறது என்றார்கள் ஆனால் அந்த புத்தகங்கள் பயனற்றவைகளாக இருந்தன. எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து அதிகளவு புடைத்துக்கொண்டிருந்தன. ஆகையால் புத்தகம் மிக மிக தடிமனாக இருந்தது. தவிர விலை வேறு அதிகமாக இருந்தது. நிச்சயம் அதை சாமானியர்களால் வாங்க முடியாது. மொத்தம் 14 புத்தகங்கள் தான் அந்தப் பள்ளியிலேயே இருந்தன.

அந்த 14 புத்தகங்களையும் பள்ளியின் லைப்ரரியில் இருந்து வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டான் லூயி. தொடுதல் உணர்ச்சி மூலம் ஒவ்வொரு வார்த்தையும் அவனால் படிக்க முடிந்தது. ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வாக்கியத்தை படித்துவிட்டு அடுத்ததற்கு வரும்போது முன்பு படித்த வாக்கியம் மறந்துவிடும். நிச்சயம் இதை விட மிகச் சிறப்பான வழி வேறு ஏதாவது இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.

பார்வையற்றோர் படிப்பதற்கு சிரமப்படக்கூடாது. பார்வையுள்ளவர்கள் எப்படி படிக்கிறோமோ அதே போன்று தொடுதல் உணர்ச்சி மூலம் அதிகம் படிக்க வேண்டும் என்று விரும்பினான். அன்று முதல் பார்வையற்றோர் படிப்பதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு எளிமையான வழி முறையை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டான்.தற்போது லூயி ஒரு முழு கிரியேட்டிவ் மனிதனாக மாறியிருந்தான். இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டு இசைக்கருவிகளை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றான். சர்ச் மற்றும் நிகழ்ச்சிகளில் அதை வாசித்து அதன் மூலம் பொருளீட்ட தொடங்கினான்.

தன்னுடைய சாதுர்யமும், கிரியேட்டிவிட்டியும் அவனுக்கு தெரியும். அவனுடைய இசையார்வம் வேறு அவனை ஒரு பண்பட்ட மனிதனாக மாற்றியிருந்தது. ஒரு நாள் அவனது திறமையை நிரூபிப்பதற்கு அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் கோடிங் சிஸ்டம் பற்றிய அவனுக்கு தெரிய வந்தது. ராணுவத் தகவல்கள் ரகசியமாதலால், பேப்பரிலோ அல்லது வேறு எதிலுமோ எழுத மாட்டார்கள். பேர்ப்பரில் துளையிட்டு, பின்னர் அந்த துளையை தடவி பார்ப்பார்கள். மிகப் பெரிய நூல்களை தடவி பார்ப்பதைவிட இது லூயிக்கு மிக சுலபமாக இருந்தது.

ஆனாலும் இந்த வழிமுறை மிகவும் தாமதமாக இருந்தது. ஒரு பக்கத்தில் அதிகபட்சம் இரண்டு வாக்கியங்களை மட்டுமே துளையிட முடிந்தது. தன்னால் இதை மேலும் எளிமையாக்கி படிக்கும் முறையை இன்னும் இலகுவாக்க முடியும் என்பதில் லூயிக்கு நம்பிக்கை இருந்தது. விடுமுறைக்காக ஊருக்கு செல்லும்போதெல்லாம் இது குறித்து ஆராய்ச்சியிலேயே செலவழித்தான் லூயி. பெற்றோர்களும் அவனை அன்பாக கவனித்துக்கொண்டார்கள்.

ஒரு நாள் வழக்கம்போல தனது தந்தையின் பட்டறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது கையில் குத்தூசி தட்duப்பட்டது. “ஆஹா… என் பார்வையை பறித்த அதே குத்தூசி” என்று எண்ணிக்கொண்டான். அடுத்த வினாடி அவன் மனதில் மின்னலென தோன்றியது ஒரு யோசனை. ஏன் இந்த குத்தூசியை பயன்படுத்தி சிறிய துளைகளை எழுப்பி அதை வைத்து படிக்கக்கூடாது?அடுத்த சில நாட்களில் இரவு பகலாக உழைத்து துளைகளை அடிப்படையாக கொண்ட உயிரெழுத்துக்களை கண்டுபிடித்தான். துளைகள் ஒன்றுக்கொன்று இடம் மாறும். ஆனால் அது தான் அந்த குறிப்பிட்ட எழுத்தை குறிக்கும்.

கடைசியில் அந்த குத்தூசியை வைத்தே முதல் ப்ரெய்லி வாக்கியத்தை உருவாக்கினான் லூயி.இது தான் இன்று உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்லி முறை உருவான வரலாறு.

error: Content is protected !!