கடல் பாசியில் குடிநீர்: பிளாஸ்டிக் யுகத்திற்கு முடிவுரை!

கடல் பாசியில் குடிநீர்: பிளாஸ்டிக் யுகத்திற்கு முடிவுரை!

ண்ணீர் என்பது வாழ்வாதாரம், ஆனால் இன்று அது ஒரு மிகப்பெரிய வணிகப் பொருளாகிவிட்டது. உலகளவில் ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வசதிக்காகவும், தூய்மைக்காகவும் நாம் வாங்கும் இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (Single-use plastic) பாட்டில்களின் உற்பத்திக்கு கோடிக்கணக்கான லிட்டர் கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, நாம் தூக்கி எறியும் இந்த பாட்டில்களில் 90% மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இவை மண்ணிலும் கடலிலும் சேர்ந்து, மட்குவதற்கு கிட்டத்தட்ட 450 முதல் 1000 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கின்றன. அதுவரை இவை நுண் பிளாஸ்டிக்காக (Microplastics) மாறி நமது உணவிலும், நீரிலும் கலந்து மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

புரட்சிகரமான மாற்றம்: Ooho தண்ணீர் குமிழிகள்

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இத்தகைய ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த ‘Notpla’ நிறுவனம், கடல் பாசிகளில் (Seaweed) இருந்து தயாரிக்கப்பட்ட “Ooho” எனும் உண்ணக்கூடிய தண்ணீர் குமிழிகளை உருவாக்கியுள்ளது. இது இன்று உலகையே வியக்க வைத்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு என்ன?

  • இயற்கையின் கொடை: இவை பாசிகளில் இருந்து தயாரிக்கப்படுவதால், பாட்டில்களைப் போல மண்ணுக்குப் பாரமாக இருப்பதில்லை.

  • அப்படியே உண்ணலாம்: மெல்லிய சவ்வு போன்ற அமைப்பிற்குள் தண்ணீர் அடைக்கப்பட்டிருக்கும். இதை அப்படியே வாயில் போட்டுக்கொள்ளலாம். அந்தச் சவ்வு உண்பதற்கு ஏற்றது மற்றும் சுவையற்றது.

  • மட்கும் தன்மை: நீங்கள் ஒருவேளை அந்தச் சவ்வை உட்கொள்ள விரும்பாமல் துப்பினால் கூட, அது ஒரு பழத்தோலைப் போல 4 முதல் 6 வாரங்களில் தானாகவே மட்கிவிடும்.

ஏன் இது அவசியம்?

லண்டன் மாரத்தான் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பையாகக் குவிவதைத் தடுக்க இந்த ‘Ooho’ குமிழிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. “கழிவு என்பது ஒரு வடிவமைப்புக் குறைபாடு” என்பதை உணர்த்தும் வகையில், பிளாஸ்டிக்கே இல்லாத எதிர்காலத்தை நோக்கி இது நம்மை அழைத்துச் செல்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!